பன்றி காய்ச்சலுக்கு பழநியை சேர்ந்த பெண் பலி

பன்றி காய்ச்சலுக்கு பழநியை சேர்ந்த பெண் பலி
Updated on
1 min read

திண்டுக்கல் மாவட்டம், பழநி பெரியப்பாநகரை சேர்ந்த தர்மராஜ் மனைவி சுமதி (52). இவர், சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் காரணமாக கோயம்புத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைபெற்று வந்த நிலையில் நேற்று காலை சுமதி உயிரிழந்தார்.

இதுகுறித்து சுமதியின் உறவினர்கள் கூறியதாவது: காய்ச்சல் ஏற்பட்டவுடன் பழநி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். டாக்டர்கள் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு குறித்து தெரிவிக்கவில்லை. பின்னர் தனியார் மருத்துவமனைக்கு சென்றபோது அவர்களின் அறிவுரையின்பேரில் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தோம். அங்கு பன்றிக்காய்ச்சல் உறுதிசெய்யப்பட்டது. பன்றிக்காய்ச்சல் குறித்து முன்கூட்டியே தெரிவித்திருந்தால் துவக்கத்திலேயே தீவிர சிகிச்சையளித்து காப்பாற்றியிருக்க வாய்ப்பிருந்திருக்கும் என்றனர்.

இதுகுறித்து பழநி டாக்டர் விஜயசேகர் கூறியதாவது: காய்ச்சல் காரணமாக பிப். 21-ம் தேதி சுமதி பழநி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் 23-ம் தேதி அவரது சொந்த விருப்பத்தின்பேரில் சென்றுவிட்டார். இங்கு சிகிச்சை பெற்றபோது பன்றிக்காய்ச்சலுக்கான அறிகுறி தென்படவில்லை. பன்றிக்காய்ச்சல் அறிகுறி தெரியவந்தால் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பிவைத்திருப்போம். பாதிக்கப்பட்டவர் குடியிருந்த பகுதியில் சுகாதாரப் பணிகள் இயக்குநர் தலைமையில் ஆய்வு நடத்திவருகின்றனர் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in