Published : 07 Mar 2014 04:44 PM
Last Updated : 07 Mar 2014 04:44 PM

தமிழகத்தில் பெண் கல்வி 76% ஆக உயர்வு: முதல்வர் ஜெயலலிதா

அதிமுக அரசின் சீரிய முயற்சியினால் தமிழகத்தில் பெண் கல்வி 76 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

மகளிர் தினத்தையொட்டி அவர் இன்று வெளியிட்ட செய்தி:

" 'பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்; எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி' என்ற பாரதியின் வரிகளுக்கேற்ப சமுதாய வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பினை உலகிற்கு உணர்த்திடும் வகையில் மார்ச் மாதம் 8 ஆம் நாள் உலகெங்கிலும் மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோர் வகுத்துத் தந்த சமதர்ம சமுதாயக் கொள்கையின்படி, பெண்கள் கல்வி அறிவு பெற்று, பொருளாதார முன்னேற்றம் எய்திடும் வகையில் தமிழ்நாட்டில் தொட்டில் குழந்தை திட்டம், ஏழைப் பெண்களுக்கு திருமண நிதிஉதவி, தாலிக்கு தங்கம், பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் டிப்ளமோ, டிகிரி முடித்த பெண்களுக்கு உயர்த்தப்பட்ட உதவித் தொகையுடன் 4 கிராம் தங்கம் வழங்குதல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டம், சுய உதவிக் குழுக்களுக்கு நிதி உதவிகள், அம்மா உணவகங்களில் சுயஉதவி குழுவினருக்கு வேலைவாய்ப்பு, பெண் அரசு ஊழியர்களுக்கு ஆறுமாத மகப்பேறு விடுப்பு, இந்தியாவிலேயே முதன் முதலாக அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், மகளிர் அதிரடிப்படை, பாதுகாப்பான தங்குமிட வசதிகள், வீரதீர செயல்கள் புரிந்த பெண்களுக்கு 'கல்பனா சாவ்லா' விருது, பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒடுக்கிட 13 அம்ச திட்டம், சிறந்த பெண்மணிக்கு 'அவ்வையார் விருது' உள்ளிட்ட மகளிர் வாழ்வை மேம்படுத்திட பல்வேறு திட்டங்களை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

அதிமுக அரசின் சீரிய முயற்சியினால் தமிழகத்தில் பெண் கல்வி 76 சதவீதமாக உயர்ந்துள்ளதும், பெண் குழந்தை பாலின விகிதம் 946 ஆக உயர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பெண்கள் தங்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் சோதனைகளை உறுதியுடன் எதிர்கொண்டு அவற்றை வெற்றிப்படியாக்கி, புதிய சரித்திரம் படைப்போம் என இந்நாளில் உறுதிகொள்வோம். அனைத்து மகளிருக்கும் எனது உளமார்ந்த மகளிர் தின வாழ்த்துக்கள்" என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

ஆளுநர் வாழ்த்து

உலக மகளிர் தினத்தையொட்டி தமிழக ஆளுநர் கே.ரோசய்யா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், 'பெண்கள் வீட்டுக்கும் நாட்டுக்கும் தூண்களாக விளங்குகின்றனர். நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றனர். 1985-ம் ஆண்டு நைரோபியில் நடத்தப்பட்ட சர்வதேச பெண்கள் மாநாட்டில் பெண்களுக்கான அதிகார வரம்பு நிர்ணயிக்கப்பட்டது.

30 ஆண்டுகள் கடந்த பிறகும் பெண்களின் முன்னேற்றம் திருப்தியாக இல்லை. அவர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதன் மூலமும் அவர்களின் மதிப்பை உயர்த்துவதன் மூலமும் பெண்களை மேம்படுத்துவோம்' என்று ஆளுநர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x