

முதல்வரை அவதூறாகப் பேசியதாக பாமக நிறுவனர் ராமதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணையை ஜூலை 1-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் தமிழக அரசு குறித்து அவதூறாக பேட்டி அளித்ததாக பாமக நிறுவனர் ராமதாஸ் மீது, கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அரசு வழக்கறிஞர் அசோகன் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு மற்றும் எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடினர். இதையடுத்து வழக்கு விசாரணையை ஜூலை 1-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி குமரகுரு உத்தரவிட்டார்.
அதேபோல, முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக தேமுதிக பொருளாளர் இளங்கோவன் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணையும் நேற்று திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணையையும் ஜூலை 1-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி குமரகுரு உத்தரவிட்டார்.