அஞ்சலகங்களில் இருந்து வங்கிக்கு மாற்றம்; முதியோர் உதவித் தொகை 2 மாதங்களாகியும் கிடைக்கவில்லை: உங்கள் குரலில் வாசகர் புகார்

அஞ்சலகங்களில் இருந்து வங்கிக்கு மாற்றம்; முதியோர் உதவித் தொகை 2 மாதங்களாகியும் கிடைக்கவில்லை: உங்கள் குரலில் வாசகர் புகார்
Updated on
1 min read

அஞ்சலகங்களில் வழங்கப்பட்டு வந்த முதியோர் உதவித் தொகை வங்கிகளுக்கு மாற்றப்பட்டதாக அறிவித்து 2 மாதங்கள் ஆகியும், வங்கிகள் மூலம் முதியோர் உதவித் தொகை கிடைக்கவில்லை என்று ‘தி இந்து’ உங்கள் குரலில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ‘தி இந்து’ உங்கள் குரலில் காட்டாங்கொளத் துரைச் சேர்ந்த பகவான்தாஸ் என்பவர் கூறியதாவது:

எனக்கு 70 வயதாகிறது. எனக்கு பிள்ளைகள் யாரும் கிடையாது. அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள நான் முதியோர் உதவித் தொகையைக் கொண்டுதான் வாழ்க்கை நடத்தி வருகிறேன். இத்தனை ஆண்டுகாலமாக சரியாக கிடைத்து வந்த முதியோர் உதவித் தொகை கடந்த 2 மாதங்களாக எனக்கு கிடைக்கவில்லை. கடந்த மே மாதம் வரை அஞ்சலகங்களில்தான் முதியோர் உதவி தொகை வழங்கப்பட்டு வந்தது. ஜூன் மாதம் முதல் வங்கிகள் மூலம் பணம் வழங்கப்படும் என்று கூறி, வங்கி விவரங்களை பெற்றுக் கொண்டனர். ஆனால், கடந்த 2 மாதங்களாக எந்த தொகையும் வங்கிக் கணக்குக்கு வரவில்லை. இதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக கிடைக்க வேண்டிய தொகையை பெற்றுத் தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக அஞ்சல் நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, “முதியோர் உதவித் தொகை வழங்கும் முறை அஞ்சல் நிலையங்களிலிருந்து வங்கிகளுக்கு மாற்றியது அரசின் உத்தரவு. அதன்படி, பயனாளிகள் வங்கிகள் மூலமே உதவித் தொகையை பெற முடியும். வங்கியில் கணக்கை இணைத்ததில் ஏதாவது தவறிருந்தால், அது தொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று விசாரிக்கலாம்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in