

ஏடிஎம் சேவை கட்டண முறையை ரத்து செய்யக் கோரி தாக்கலான பொது நல மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மதுரை சொக்கிகுளத்தைச் சேர்ந்த எஸ்.தமிழரசன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
இந்தியா முழுவதும் 1.60 லட்சம் ஏடிஎம் மையங்கள் உள்ளன. கடந்த ஆண்டு 2014 நவ.1-ம் தேதி முதல் ஏடிஎம் மையங்களில் கட்டணம் இன்றி பணம் எடுக்கும் முறைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் பிற வங்கிகளின் ஏடிஎம்களில் மாதம் 3 முறை, பிற பகுதிகளில் உள்ள ஏடிஎம்களில் மாதம் 5 முறை மட்டுமே பணம் எடுக்க முடியும். அதற்கு மேல் பிற வங்கியின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தினால் அதற்கு தனிக் கட்டணம் வசூலிக்கப்படும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
இந்த கட்டண முறையால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் சேவைகளை மேம்படுத்த வேண்டுமே தவிர, ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் வசதியை குறைக்கக் கூடாது.
எனவே, பிற வங்கிகளின் ஏடிஎம்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதித்து ரிசர்வ் வங்கி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி நூட்டி ராம மோகனராவ் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
இதில், ‘‘ஏடிஎம் சேவைக்கு கட்டணம் வசூலிப்பது ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவு. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.