Published : 31 Dec 2013 12:00 AM
Last Updated : 31 Dec 2013 12:00 AM

தேமுதிகவுடன் திமுக பேச்சு துவக்கம் - வீராசாமியிடம் பொறுப்பு ஒப்படைப்பு

திமுக கூட்டணியில் தேமுதிகவை சேர்ப்பதற்கான முயற்சிகள், முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி மூலம் துவங்கப்பட்டுள் ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன. நாயுடு சமூகத்தைச் சேர்ந்த தென்மாவட்ட தொழி லதிபர்கள் சிலர், விஜயகாந்திடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தற்போது தேமுதிகவை திமுக கூட்டணியில் சேர்ப்பதற்கான முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. கடந்த வாரம் தேமுதிக சார்பில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற பேராயர் எஸ்றா சற்குணம், இதுகுறித்து விஜய காந்துக்கு மறைமுகமாக அழைப்பு விடுத்தார். அதுபற்றி

பரிசீலிப்பதாக விஜயகாந்த் பதிலளித்தார். திமுக கூட்டணியில் தேமுதிக இணையும் வாய்ப்பு ஏற்பட்டால் மகிழ்ச்சி என்று கருணாநிதி கூறினார்.

இந்நிலையில், தேமுதிக வுடனான முதல்கட்ட அதிகாரப் பூர்வமற்ற பேச்சு வார்த்தையை இரு தினங்களுக்கு முன்பு திமுக துவங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் அமைச்சரும் திமுக மூத்த தலைவருமான ஆற்காடு வீராசாமியிடம் இந்தப் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவரும் மற்றும் தென் மாவட்ட நாயுடு சமூக தொழிலதிபர்கள் சிலரும் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

வைகோவுக்குப் பிறகு, தென்மாவட்ட திமுகவில் நாயுடு சமூகத்துக்கு சரியான பிரதி நிதித்துவம் இல்லை எனக் கூறப் படுகிறது. தற்போது தேமுதிகவை கூட்டணியில் சேர்த்தால் நாயுடு சமூக ஓட்டுகளை தங்கள் பக்கம் ஈர்த்துவிடலாம் என திமுக கருதுகிறது. அதனால், தேமுதிகவை எப்படியாவது கூட்டணிக்குள் கொண்டு வரவேண்டும் என்பதில் திமுக தலைமை தீவிரமாக உள்ளதாக கூறப்படுகிறது.

தென்மாவட்டங்களில் நாயுடு சமூகத்தினர் கணிசமாக வசிக்கும் விருதுநகர், தூத்துக்குடி, தேனி, திருநெல்வேலி, திண்டுக்கல், மதுரை மற்றும் வட மாவட்டங்களில் சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் நாயுடு சமூக ஓட்டுகளை ஒட்டுமொத்தமாக திமுக கூட்டணிக்கு கிடைக்க வழி செய்யலாம். இதற்கு தேமுதிகவும் கூட்டணியில் இணைய வேண்டும் என்று நாயுடு சமூக தொழிலதிபர்கள் சிலர் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x