Published : 17 Feb 2014 07:01 PM
Last Updated : 17 Feb 2014 07:01 PM

மதுரைக்கு சுவாசம் தந்த மரங்கள் வெட்டிச் சாய்ப்பு: ரவுண்டானா ஓடாத மணிக்கூண்டை அகற்றி இருக்கலாமெ?

மதுரையில் சாலையை அகலப்படுத்துவதற்காக ராட்சத மரங்களை நெடுஞ்சாலைத் துறையினர் வெட்டிச் சாய்த்தனர். சாலையின் நடுவே பராமரிப்பு இல்லாமல் கிடக்கும் ரவுண்டானா, ஓடாத மணிக்கூண்டில் கை வைக்காமல், ஏன் நிழல் தரும் மரங்களை வெட்டுகிறீர்கள் என்று கூறி, மரங்களை வெட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மதுரை- மேலூர் சாலையில் மாவட்ட நீதிமன்றம்- எம்.ஜி.ஆர். சிலை இடையே இடதுபுறம் சாலையோரக் காடு போல நெருக்கமாக மரங்கள் வளர்ந்திருந்தன. கடும் வெயிலில் வாகனங்கள் ஓட்டி வருபவர்களும், பாதசாரிகளும் இந்த இடத்தைக் கடக்கும்போது இதமாக உணர்வார்கள். குளிர்ந்த காற்று அவர்களைத் தழுவிச் செல்லும்.

ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் திடீரென இந்த மரங்களை 20 பேர் கொண்ட குழு வெட்டிச் சாய்த்தது. மரங்களை நவீன இயந்திரங்களைக் கொண்டு அசுர வேகத்தில் அவர்கள் வெட்டிச் சாய்த்தபோது, அதில் கூடு கட்டியிருந்த வாயில்லாத ஜீவராசிகளான காகம், குயில் உள்ளிட்ட ஏராளமான பறவைகள் அலறியபடி அந்த இடத்தையே வட்டமிட்டன. அணில்கள் முதல் சின்னஞ்சிறு பூச்சிகள் வரை தங்களது இருப்பிடத்தை இழந்து தவித்தன.

முதலில் புளியமரத்தை வெட்டிய அவர்கள், மரத்தை பல நூறு துண்டுகளாக்கி லாரியில் ஏற்றிச் சென்றனர். பின்னர், சுமார் 4 அடி விட்டம் கொண்ட ராட்சத வாகை மரத்தை வெட்டிச் சாய்த்தனர். அந்த மரம் விழுந்த மறுகணமே, சாலையின் பெரும் பகுதி நிழல் காணாமல் போனது. திரையை விலக்கியதுபோல, சூரிய ஒளியானது வாகன ஓட்டிகளின் கண்களை நேரடியாகத் தாக்கியது.

மரங்கள் வெட்டப்படுவது ஏன் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கேள்வி எழுப்பினர். மேலூர் சாலையானது மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் இருந்து ஆர்.டி.ஓ. அலுவலகம் வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதனை மாவட்ட நீதிமன்றம் வரை விரிவுபடுத்துவதற்காகத்தான் மரங்கள் வெட்டப்படுகின்றன என்று நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் தெரிவித்தனர்.

விழித்தெழு மதுரை, ஓசை போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் மரங்களை வெட்டுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், மொத்தம் எட்டு மரங்களை வெட்டும் இலக்கோடு வந்த அதிகாரிகளால் 4 மரங்களை மட்டுமே வெட்ட முடிந்தது. மற்ற மரங்கள் அநேகமாக இன்று (திங்கள்கிழமை) வெட்டப்படலாம் என்று தெரிகிறது.

ரவுண்டானாவில் கை வைக்காதது ஏன்?

சாலை குறுகலாக உள்ளது என்று அதிகாரிகள் குறிப்பிட்ட இடத்தில், சுமார் 10 முதல் 15 அடி அகலம் கொண்ட ரவுண்டானா உள்ளது. அதனுள் கடந்த 1977-ம் ஆண்டு அகர்வால் என்ற தனியார் நிறுவனம் அமைத்துக் கொடுத்த, தற்போது ஓடாத மணிக்கூண்டும், பராமரிப்பில்லாமல் கருகிய சில செடிகள் மட்டும் உள்ளன. சமீபத்தில் இந்த மணிக்கூண்டைச் சுற்றி, தனியார் சட்டை நிறுவனம் ஒன்று தனது விளம்பர போர்டை வைத்து, பராமரிப்பு என்று தங்களது நிறுவனப் பெயரை வைத்துள்ளது.

ஆனால், இந்த ரவுண்டானா எந்தப் பராமரிப்பும் இல்லாமல் உள்ளது. சாலையை அகலப்படுத்துவதற்குப் பதில் இந்த ரவுண்டானாவை அகற்றலாமே என்று அனைவரும் கேள்வி எழுப்பினர். அதேபோல, அருகில் இருக்கும் சிலை ரவுண்டானாவில் கை வைக்காமல், 50, 60 ஆண்டுகள் பழமையான மரங்களை வெட்டிச் சாய்ப்பது நியாயம்தானா என்றும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x