

வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை அரசு அறிவித்துள்ளது. இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இதற்கிடையே, வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை எதிர்த்து விருதுநகர் மாவட்டம் ஏ.முக்குளத்தைச் சேர்ந்த சி.ராமகண்ணன், புதுக்கோட்டை மாவட்டம் காதக்குறிச்சி தமிழரசன் உள்ளிட்ட 18 பேர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர் பணிக்காக ஆசிரியர் தேர்வு வாரியம் 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தகுதித் தேர்வு நடத்தியது. இந்தத் தேர்வில் நாங்கள் வெற்றி பெற்றோம். ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அவர்கள் பிளஸ் 2, பட்டப்படிப்பு மற்றும் பி.எட்., படிப்பில் பெற்ற மதிப்பெண்களுக்கு தனி மதிப் பெண் சலுகை (வெயிட்டேஜ் மதிப்பெண்) வழங்கி தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறை கடந்த மே 30-ம் தேதி அரசாணை வெளி யிட்டது. இந்த அரசாணையால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம்.
ஏனெனில், தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு அமலில் இருந்த கல்வி முறைக்கும் மதிப்பெண் வழங்கும் முறைக்கும், தற்போது அமலில் உள்ள கல்வி மற்றும் மதிப்பெண் முறைகளுக்கும் வேறுபாடுகள் உள்ளன. இப்போதைய மதிப்பெண் முறையில் அதிக மதிப்பெண் பெற முடியும். அந்த அரசாணையில் பணி மூப்பு, கற்பித்தல் பணி அனுபவத்துக்கு தனி மதிப்பெண் சலுகை வழங்கப்படவில்லை. எங்களுக்கு பல ஆண்டு கற்பித்தல் அனுபவம் உள்ளது.
பிளஸ் 2, பட்டப்படிப்பு, பி.எட்., படிப்புகளில் பெற்ற மதிப்பெண்ணுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கி பிறப்பித்த அரசாணை தன்னிச்சையானது. இந்த அரசாணையால் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றபோதிலும் எங்களின் மதிப்பெண் குறைந்துவிட்டது. இதனால் எங்களுக்கு ஆசிரியர் பணி வழங்க மறுக்கப்பட்டது.
எனவே, வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை கைவிட்டு தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் பணி வழங்க உத்தரவிட வேண்டும். மேலும், வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்குவது தொடர்பான அரசாணையை ரத்து செய்து எங்களுக்கு ஆசிரியர் பணி வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டி ருந்தது.
இந்த மனு நீதிபதி கே.கே.சசிதரன் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. ‘‘பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடத்தலாம். ஆனால், மறு உத்தரவு வரும் வரை பணி நியமனம் வழங்கக்கூடாது. ஏற்கெனவே பணி நியமன ஆணை பெற்றவர்கள் பணியில் சேரவும் இடைக்கால தடை விதிக்கிறேன்’’ என்று உத்தரவிட்ட நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்க பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர், ஆசிரியர் தேர்வு வாரிய செயலர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.
பணி நியமன உத்தரவு: தீர்ப்புக்கு பின் வழங்கப்படும்
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன உத்தரவு உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பின் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வுசெய்யப் பட்ட 10,444 பட்டதாரி ஆசிரியர்கள், அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான ஆன்லைன் கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது. முதல் நாளில் மாவட்டத்துக்குள் உள்ள காலியிடங்களுக்கு கலந்தாய்வு நடந்தது.
சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை ஆகிய 5 மாவட்டங்களில் காலியிடம் இல்லாததால் அந்த மாவட்டங்களில் மட்டும் கலந்தாய்வு நடைபெறவில்லை. இதர மாவட்டங்களில் காலை 9 மணிக்கு கலந்தாய்வு தொடங்கி இரவு 8 மணிக்கு மேல் நீடித்தது. ஆசிரியர்கள் தங்களுக்குப் பிடித்தமான பள்ளியை ஆன்லைனில் தேர்வு செய்தனர்.
முதல் நாளில் மட்டும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது. இந்நிலையில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை புதன்கிழமை இடைக்கால தடை விதித்தது. இந்த நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர் ஆசிரியர் களுக்கு பணிநியமன உத்தரவு வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறையினர் தெரிவித்தனர்.
இன்றும், நாளையும் (வியாழன், வெள்ளி) வெளி மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறும்.