

ஐடி ஊழியர் சுவாதி படுகொலை முதல் ராம்குமார் மரணம் வரை முறையான நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக காங்கிரஸின் எஸ்சி/ எஸ்டி பிரிவு சார்பில் சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.
தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப் பட்டுள்ள திருநாவுக்கரசர் சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களை நேற்று சந்தித்தபோது கூறியதாவது:
தமிழக காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றதையடுத்து, தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரான ஆர்எம்.வீரப்பனை சந்தித்து வாழ்த்து பெற்றேன். பிறகு, எனது நண்பரான நடிகர் ரஜினிகாந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். ரஜினிகாந்த் நல்ல நலத்துடன் உள்ளார். கபாலி படம் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தேன். காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டதற்காக அவரும் வாழ்த்தினார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. நாங்கள் அரசியல் எதுவும் பேசவில்லை.
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று 4 வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும். செப்டம்பர் 21 முதல் 27 வரை ஒரு வார காலத்துக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பினை கர்நாடக அரசு செயல்படுத்த வேண்டும். இந்தப் பிரச்சினையில் அரசியல், மொழி, இனம், மாநிலம் என்ற பாகுபாடு இல்லாமல் செயல்பட வேண்டும்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை கடந்த 21-ம் தேதி சந்தித்து உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக பேசினேன். சட்டப்பேரவைத் தேர்த லின் போது திமுக அணியில் இருந்த கட்சிகள், தங்களது மாவட்டச் செயலாளர்களை அந்தந்த மாவட்டங்களில் உள்ள திமுக செயலாளர்களை தொடர்பு கொண்டு உள்ளாட்சி இடங்களை பிரித்துக் கொள்ள வேண்டும் என்று திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் கூறியுள்ளார். எனவே, தமாகா கூட்டணியில் இருப்பதாக திமுக கூறவில்லை.
ராம்குமார் மரணம் தொடர்பாக சொல்லப்படும் விஷயங்கள் நம்பும்படியாக இல்லை. எனவே, சுவாதி படுகொலை முதல் ராம்குமார் மரணம் வரை பணியில் உள்ள உச்ச நீதிமன்ற அல்லது உயர் நீதிமன்ற நீதிபதியையோ, சிபிஐ அமைப்பையோ கொண்டு விசாரணை நடத்த வேண்டும். இதனை வலியுறுத்தி தமிழக காங் கிரஸின் எஸ்சி/எஸ்டி பிரிவு சென்னையில் வரும் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.