தூத்துக்குடி: ரூ.32.82 கோடியில் மீன் இறங்கு தளம்

தூத்துக்குடி: ரூ.32.82 கோடியில் மீன் இறங்கு தளம்
Updated on
2 min read

தூத்துக்குடி மாவட்டத்தில் தருவைகுளம், திரேஸ்புரத்தில் ரூ. 32.82 கோடி மதிப்பீட்டில், நவீன மீன் இறங்கு தளங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் மீன்களை சுகாதாரமாகக் கையாண்டு, ஏற்றுமதியை அதிரித்து, மீனவர்கள் தங்கள் வருவாயைப் பெருக்கிக் கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

40 ஆயிரம் டன்

தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில், 163.5 கி.மீ. கடற்கரையைக் கொண்டது தூத்துக்குடி. இம்மாவட்டத்தில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக, மீன்பிடித்தல் மிக முக்கியத் தொழிலாக விளங்குகிறது. 24 கடலோரக் கிராமங்களில், 50 ஆயிரம் மீனவர்கள் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பதிவு செய்யப்பட்ட 448 விசைப்படகுகள், 2,073 நாட்டுப்படகுகள், 1,606 பைபர் படகுகள், 1,022 கட்டுமரங்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இம்மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 40 ஆயிரம் டன் அளவுக்கு மீன்கள் பிடிக்கப்படுகின்றன.

ஏற்றுமதியில் தர மேம்பாடு

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து மீன், இறால் போன்ற கடல்உணவுப் பொருட்கள் அதிகளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஏற்றுமதி மூலமே மீனவர்களுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது. ஆனால், மீன்களை இறக்குமதி செய்யும் நாடுகள் தரத்தை முக்கியமாக எதிர்பார்க்கின்றன.

குறிப்பாக மீன்கள் சுகாதாரமான முறையில் கையாளப்படுகின்றனவா என்பது முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. மீன்கள் சுகாதாரமான முறையில் கையாளப்படாததால், பெரும்பாலான மீன்களை ஏற்றுமதி செய்ய முடியாமல் போய்விடுகிறது.

மீன் இறங்கு தளங்கள்

இதனைக் கருத்தில் கொண்டு, மீன்களை சுகாதாரமான முறையில் கையாள, பல்வேறு வசதிகளை தமிழக அரசு மீனவ கிராமங்களில் ஏற்படுத்தி கொடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதிதான் மீன் இறங்கு தளங்கள். அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் தருவைகுளம் மற்றும் திரேஸ்புரத்தில் இரண்டு நவீன மீன் இறங்கு தளங்கள் அமைக்க அரசு உத்தரவிட்டு, அதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. தருவைகுளத்தில் நபார்டு கிராமப்புற உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதி உதவியுடன், ரூ. 16.26 கோடி மதிப்பீட்டில் மீன் இறங்கு தளம் அமைக்கப்பட்டு வருகிறது. அதுபோல, திரேஸ்புரத்தில் ரூ. 16.56 கோடியில் நவீன மீன் இறங்கு தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

பணிகள் வேகம்

மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

மீன் இறங்கு தளங்களில் படகுகள் நிறுத்தும் ஜெட்டி, அலை தடுப்புச் சுவர், நவீன மீன் ஏலக்கூடம், வலை பின்னும் கூடம், கழிப்பறைகள், கான்கிரீட் சாலைகள், மின் விளக்குகள், குடிநீர் வசதிகள் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்படுகின்றன.

திரேஸ்புரம் மீன் இறங்கு தளத்தில் இன்றைய தேதியில் 79.52 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. இங்கு பணிகள் முடிக்கப்படவேண்டிய நாள் 17.9.2014. ஆனால், 2014 மார்ச் மாதமே பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கிறோம். அதுபோல தருவைகுளம் மீன் இறங்கு தளத்தில் 57.49 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த பணிகளும் இன்னும் 6 மாதங்களில் முடிவடையும் என எதிர்பார்க்கிறோம்.

இப்பணிகள் முடிவடைந்ததும் இப்பகுதியில் மீன்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் கையாள முடியும். இதன் மூலம் மீன்வர்கள் பிடித்து வரும் மீன்களுக்கு ஏற்றுமதி மதிப்பு அதிகரிக்கும். மேலும், மீனவர்கள் தங்கள் படகுகளை பத்திரமாக கரையில் நிறுத்தவும் முடியும்.

மீன்பிடித் துறைமுக மேம்பாடு

இதேபோல் தூத்துக்குடியில் உள்ள மீன்பிடித் துறைமுகத்திலும் மீன்களை சுகாதாரமான முறையில் கையாள, பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் ரூ. 12.05 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கான்கிரீட் தளம் அமைத்தல், மின் விளக்குகள் அமைத்தல், கழிவுநீர் வடிகால் அமைத்தல், கழிவுநீர் சுத்திகரிப்பு வசதி செய்தல், மீன் ஏலக்கூடம், வலைபின்னும் கூடம் போன்றவற்றை சீரமைத்து மேம்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகளும் அடுத்த ஓரிரு மாதங்களில் முடிவடையும் என்றனர் அவர்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in