வெள்ள இழப்பீடு, ஜல்லிக்கட்டு, மீனவர் பிரச்சினை: ஜெயலலிதா கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க மத்திய அரசுக்கு அதிமுக வலியுறுத்தல்

வெள்ள இழப்பீடு, ஜல்லிக்கட்டு, மீனவர் பிரச்சினை: ஜெயலலிதா கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க மத்திய அரசுக்கு அதிமுக வலியுறுத்தல்
Updated on
2 min read

வரும் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டை நடத்த நடவடிக்கை வேண்டும், வெள்ள இழப்பீடை உடனடியாக தர வேண்டும், மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் இரண்டு தீர்மானங்கள் மத்திய அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து வலியுறுத்தி நிறைவேற்றப்பட்டன.

அவற்றின் விவரம் வருமாறு:

தீர்மானம் 1.

மழை வெள்ள பாதிப்புகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை, மத்திய அரசு முழுமையாக வழங்கிட வலியுறுத்ததி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அத்தீர்மானத்தில், "சமீபத்தில் பெய்த கனமழை பெருவெள்ளத்தால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பலர் தங்கள் வாழ்வாதாரங்களை முற்றிலுமாக இழந்திருக்கின்றனர். குறிப்பாக, ஏழை, எளிய, விவசாய, மீனவ மக்கள் பெரும் பொருட்சேதத்திற்கு ஆளாகி உள்ளனர். மாநில அரசு பலத்த உள்கட்டமைப்பு சேதத்தை சந்தித்திருக்கிறது.

எனவே, மத்திய அரசு தமிழகத்திற்குத் தேவையான நிதி உதவியை உடனடியாகச் செய்திட வேண்டும்; 25,912.45 கோடி ரூபாய் அளவிற்கு மத்திய அரசு தமிழகத்திற்கு உதவிட வேண்டும் என்ற வேண்டுகோளை புள்ளி விவரங்களோடு முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி வலியுறுத்தி உள்ளார்.

தமிழகத்திற்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளையும், இழப்புகளையும் முதல்வர் பிரதமரிடம் நேரிடையாகவே விளக்கிக் கூறி இருக்கிறா. எனவே, முதல்வரின் கோரிக்கைகளை ஏற்று, மத்திய அரசு உடனடியாகத் தேவையான நிவாரண நிதியை தமிழகத்திற்கு அளித்திட வேண்டும் என்று இந்தப் பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீர்மானம் 2:

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், வரும் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டை நடத்த உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் இரண்டாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அவற்றின் விவரம்:

அ) தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை தொடர்ந்து துன்புறுத்தி வருவதையும், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் வண்ணம் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்து படகுகளை பறிமுதல் செய்து மனிதாபிமானமற்ற வகையில் செயல்பட்டு வருவதையும் தடுத்து நிறுத்திட, மத்திய அரசு, வெளியுறவுத் துறை அமைச்சர்கள் அளவில் உடனடியாகப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க வலியுறுத்தப்படுகிறது.

தமிழகத்திற்குச் சொந்தமான நிலப் பரப்பாகிய கச்சத் தீவை இலங்கைக்கு, திமுக துணையோடு இந்திய அரசு தாரை வார்த்த காலத்தில் இருந்து, கடந்த பல ஆண்டுகளாக தமிழக தென் கடலோர மீனவர்கள் சொல்லொண்ணா துயரங்களைச் சந்தித்து வருகின்றனர். இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் கூட, தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில் தொழில் செய்ய இயலாத நிலை இன்றளவும் காணப்படுகிறது. நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும்; தாக்கப்படுவதும்; அவர்களது படகுகளும், மீன்பிடி உபகரணங்களும் பறித்துச் செல்லப்படுவதும் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இந்தத் துயர நிலை மாறி ஏழை, எளிய தமிழக மீனவர்கள் தங்களது அன்றாட வாழ்வை நிம்மதியாக நடத்திட மத்திய அரசு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இலங்கை அரசோடு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் அளவில் உயர் நிலை பேச்சுவார்த்தைகளை உடனடியாகத் தொடங்கி தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க இந்தப் பொதுக்குழு மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

ஆ) சங்க காலம் முதல் தமிழகத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு விழா தொடர்ந்து நடைபெற, மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டுவர வலியுறுத்தி, கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் விடுத்த கோரிக்கையை உடனடியாக ஏற்று ஆவன செய்ய வலியுறுத்தப்படுகிறது.

`ஜல்லிக்கட்டு' என்ற வீர விளையாட்டு சங்க காலம் முதல் கடந்த பலநூறு ஆண்டுகளாக, தமிழகத்தில் நடைபெற்று வரும் இளைஞர்களின் சாகச விளையாட்டு; இது தமிழர்களின் வீர மரபோடு இரண்டறக் கலந்த ஒன்று. பொங்கல் திருநாள் கொண்டாட்டங்களின் ஓர் அங்கமாகத் தொடர்ந்து பன்னெடுங்காலமாக நடைபெற்று வரும் `ஜல்லிக்கட்டு', தமிழகத்தில் காளை மாடுகளுக்கு செய்யப்படும் சிறப்பே தவிர, மிருக வதை அல்ல என்ற பண்பாட்டு உண்மையை ஏற்றுக்கொண்டு உடடினயாக ஓர் அவசரச் சட்டத்தை இயற்றுவதன் மூலம், எதிர்வரும் பொங்கல் திருநாள் கொண்டாட்டங்களின் போது `ஜல்லிக்கட்டு' நடத்தப்பட உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று, கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் கோரிக்கையை ஏற்று ஆவன செய்ய வேண்டும் என்று மத்திய அரசை இந்தப் பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அத்தீர்மானங்களில் விவரிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in