

கவிக்கோ அப்துல் ரகுமான் உடல் நலக்குறைவால் நேற்று அதிகாலை சென்னையில் கால மானார். அவருக்கு வயது 80.
சிறுநீரகத் தொற்றுப் பிரச்சினை யால் கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த கவிஞர் அப்துல் ரகுமான் மருத் துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்து கடந்த திங்கள்கிழமை வீடு திரும்பிய அவருக்கு நேற்று அதிகாலை திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதை யடுத்து சென்னை பனையூரில் உள்ள வீட்டில் இருந்து மருத் துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்தது.
மதுரையில் பிறந்த அப்துல் ரகுமான் பள்ளி, கல்லூரி படிப்பு களை அங்கேயே முடித்தார். பணி நிமித்தமாக வாணியம்பாடிக்கு வந்தவர், அங்குள்ள இஸ்லாமியக் கல்லூரியில் விரிவுரையாளராக பணியைத் தொடங்கி பின்னர் தமிழ்த் துறைத் தலைவராக 20 ஆண்டுகள் பணியாற்றினார். அவரது தந்தையாரும், தாத்தாவும் சிறந்த உருது கவிஞர்கள் ஆவர். அதனால், இயல்பிலேயே அப்துல் ரகுமானும் கவிதை எழுதும் ஆற்றல் பெற்றிருந்தார். தமிழில் கவிதைக் குறியீடுகள் குறித்து ஆராய்ந்து சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். தமிழ், ஆங்கிலம், அரபி, உருது, பாரசீகம், இந்தி ஆகிய மொழிகளில் அவர் புலமை பெற்றிருந்தார். சமஸ்கிருத மொழியும் கற்றிருந்தார்.
புதுக்கவிதைத் துறையில் தங்களை நிலைநிறுத்திக் கொண்ட வர்களுள் அப்துல் ரகுமான் குறிப்பிடத்தக்கவர். இவரது முதல் கவிதை தொகுப்பான ‘பால்வீதி’ 1974-ம் ஆண்டு வெளியானது. ‘நேயர் விருப்பம்’, ‘மின்மினிகளால் ஒரு கடிதம்’, ‘ரகசிய பூ’, ‘பித்தன்’, ‘விதைபோல் விழுந்தவன்’, ‘பாலை நிலா’ உள்ளிட்ட பல கவிதை நூல்களை அப்துல் ரகுமான் எழுதியுள்ளார். தொடர்ந்து பல இதழ்களில் கட்டுரைகள், கவிதை கள் எழுதியுள்ள இவர் ‘தமிழ்நாடு’ என்ற நாளிதழிலும் சில ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
‘ஆலாபனை’ என்ற கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது மற்றும் கவியரசர் பாரிவிழா விருது, தமிழன்னை விருது, பாரதிதாசன் விருது, கலைமாமணி, கம்பர் விருது, உமறுப் புலவர் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
இவரது தத்துவக் கவிதைகள் தனிக்கவனம் பெற்றவை. ஹைக்கூ, கஜல் ஆகிய பிறமொழி இலக்கிய வகைகளை இவர் தமிழில் பரவச் செய்தார். சூஃபி பாடல்களின் தத்துவ தரிசனம் இவர் பாடல்களில் பிரதிபலிக்கும்.
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பனையூரில் வசித்து வந்த அப்துல் ரகுமானுக்கு டாக்டர் சையத் அஸ்ரஃப் என்ற மகனும், வகிதா பேகம் என்ற மகளும் உள்ளனர். மனைவி மெஹபு பேகம் ஏற்கெனவே காலமாகிவிட்டார். அப்துல் ரகுமானின் இறுதிச் சடங்குகள் இன்று பகல் 12 மணிக்கு திருவான்மியூரில் இஸ்லாமிய முறைப்படி நடைபெறவுள்ளது.
அப்துல் ரகுமானின் உடலுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டா லின், கனிமொழி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சியினரும், திரைப்பட இயக்குநர்கள் லிங்குசாமி, கரு.பழனியப்பன், பிருந்தா சாரதி, பாடலாசிரியர்கள் அறிவுமதி, பழநிபாரதி, கபிலன், யுகபாரதி இசையமைப்பாளர் ஜிப்ரான் உள்ளிட்ட பலரும் நேற்று அஞ்சலி செலுத்தினர். பல்வேறு தலைவர்கள், திரையுலகினர் அவருக்கு இரங்கல் தெரிவித் துள்ளனர்.
சினிமாவுக்கு விருப்பமில்லை
கவிக்கோ அப்துல் ரகுமானுக்கு திரைப்படங்களில் பாடல்கள் எழுத பலமுறை வாய்ப்பு தேடி வந்தது. ஆனால், அவர் அதை தவிர்த்தார். சமீபத்தில் நடைபெற்ற கவிக்கோ விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட இசை யமைப்பாளர் இளையராஜா, ‘நீங்கள் சினிமாவுக்கு பாட்டு எழுத வேண்டும்?’ என்று கேட்டுக்கொண்டார். அதற்கு அப்துல் ரகுமான், ‘சினிமாவுக்கு எழுத விருப்பமில்லை. வேண்டு மானால் ஆல்பத்துக்கு எழுது கிறேன்’ என்று கூறினார். அதற்கு இளையராஜா, ‘விரைவில் அப்துல் ரகுமானின் வரிகளில் தனி ஆல்பம் கொண்டு வருவேன்!’ என்று கூறினார்.