

கர்நாடகாவில் பெய்த மழை காரணமாக நடப்பாண்டு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 113 அடியாக உயர்ந்தது. இதையடுத்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
டெல்டா பகுதியில் தேவைக்கு ஏற்ப மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரைவிட மிகுதியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால், அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
மேட்டூர் அணையில் இருந்து நேற்று முன் தினம் வரை விநாடிக்கு 21 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி டெல்டா பாசனத்துக்கும், 900 கனஅடி கால்வாய் பாசனத்துக்கும் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. நேற்று முன் தினம் இரவு முதல் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு 18 ஆயிரம் கனஅடியாகவும், கால்வாய் பாசனத்துக்கு 900 கனஅடியாகவும் நீர் திறப்பு குறைக்கப்பட்டது.
நேற்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90.76 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 6,740 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 18,900 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.