

‘எனது பிறந்த நாளில் ஆடம்பர விழாக்கள் வேண்டாம், சால்வை, பொன்னாடைகளைத் தவிர்த்து புத்தகங்களை வழங்குங்கள்’ என்று திமுகவினருக்கு அக்கட்சி யின் செயல் தலைவர் மு.க.ஸ்டா லின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தொண்டர்க ளுக்கு அவர் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
ஒரே இல்லத்தில் வாழ்ந்து சதிச் செயலில் இறங்கி செயல் பட்ட இந்த ஆட்சிக்கு எதிரான தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில், போராட்டக் களங்களை திமுக தொடர்ந்து எதிர்கொண்டு வருகி றது. மக்களின் விருப்பத்துக்கு மாறான அரசை அமைதிப் புரட்சி வழியில் அகற்றுவோம். மக்களின் ஏகோபித்த நம்பிக்கையைப் பெற்ற அரசாக திமுக அரசு அமையும் வரையில் ஜனநாயக வழியிலான இந்தப் போராட்டம் தொடரும். அந்த வெற்றித் திருநாள் வெகு தொலைவில் இல்லை.
தொண்டர்களின் சளைக்காத உழைப்புடனும் ஒத்துழைப்பு டனும் தமிழக மக்களின் பேராதர வுடனும் அறவழிப் போராட்ட களத்தை திமுக கட்டமைத்து சந்தித்து வரும் நிலையில், இடைக்கால இளைப்பாறுதல் போல என்னுடைய பிறந்த நாளுக் கான வாழ்த்துச் செய்திகளை திமுகவினர் பலரும் முன்கூட்டியே தெரிவித்து வருகின்றனர்.
பிறந்த நாள் விழாக்களை ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம். மக்களுக்கு பயன் தரும் வகையில் ரத்ததானம், நலத்திட்ட உதவிகள், மரக்கன்று நடுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என ஆண்டுதோறும் வேண்டுகோள் விடுத்து வருகிறேன். அத்துடன் பேனர்கள், கட் - அவுட்கள் போன்ற பொதுமக்களுக்கு அதிருப்தி ஏற்படுத்தும் பிறந்த நாள் அலங்கார ஆடம்பரங்களை கண்டிப்பாக, கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும். என்னுடைய வேண்டுகோளை ஏற்று தவறாமல் செயல்படுத்தும் திமுக தொண்டர்களின் கட்டுப்பாடே எனக்கு கிடைக்கும் மிகச் சிறந்த பிறந்தநாள் பரிசாக கருதுகிறேன்.
என் பிறந்த நாளன்று நேரில் வாழ்த்து தெரிவிக்கும் பலரும் பொன்னாடை என்ற பெயரில் செயற்கை இழையிலான பளபளப்பு சால்வைகளை போர்த்துவது வழக்கமாகிவிட்டது. இதைத் தவிர்த்து புத்தகங்களை அளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.
நீங்கள் வழங்கும் புத்தகங்களில் எனது அறிவை மேலும் விசாலப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்பதோடு, மிகுதியாக சேரும் புத்தகங்களை தமிழகத்தில் உள்ள பல நூல கங்களுக்கும் கொடுத்து உதவி, அதன்மூலம் தமிழக இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைவரும் அளவிலா பயன்பெறச் செய்ய முடியும். சால்வை, பொன்னாடை போன்ற பகட்டான பரிசுகளைத் தவிர்த்து, மார்ச் 1-ம் தேதி இளைஞர் எழுச்சி நாள் முதல் தொடர்ந்து நல்ல புத்தகங்களை வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.