

அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலின்போது விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்குவோம் என்றும், கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டவர்கள் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்குவோம் என்ற பிரதான வாக்குறுதியை முன்வைத்தனர்.
இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக உறுப்பினர்களே வெற்றி பெற்றுள்ளதால் விருத்தாசலம் மற்றும் கள்ளக்குறிச்சி தொகுதியை சேர்ந்த இரு உறுப்பினர்களும் தத்தம் தொகுதியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை, நடப்புக் கூட்டத் தொடரின் மானியக் கோரிக்கையின் போது முன்வைக்க உள்ளனர்.
தனி மாவட்டம் அவசியத்துக்கான காரணம்
கடலூர், விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்டமாக செயல்பட்டு வந்த நிலையில் 1991-ல் நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பை கருத்தில் கொண்டு, கடந்த 1992-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலும், நிர்வாக வசதிக்காகவும் கடலூர் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு விழுப்புரம் மாவட்டம் உருவானது. இதையடுத்து விழுப்புரம் நகரம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்க தொடங்கியுள்ளது.
தற்போது கடலூர் மாவட்டத்தின் மக்கள் தொகை 26 லட்சத்து 60 ஆக உள்ளதாலும், கடலூர் மாவட்டத்தின் மேற்கு பகுதி எல்லை சுமார் 105 கி.மீ தொலைவு வரை நீள் வட்டத்தில் இருப்பதாலும் திட்டக்குடி, வேப்பூர், விருத்தாசலம் உள்ளிட்ட வருவாய் வட்டத்துக்குட்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் மாவட்ட தலைநகருக்கு வந்து செல்வதில் நிறைய இடர்பாடுகள் நிலவுவதோடு, கால விரயமும் ஏற்படுவதாக கூறுகின்றனர். மேலும் மாவட்ட அளவில் நடைபெறும் அரசு விழாக்களிலும் பங்கேற்க முடியாத சூழல் இருப்பதோடு, அரசின் வளர்ச்சித் திட்டங்களும் இப்பகுதியில் மேற்கொள்ளப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுகிறது. மாவட்ட தலைநகரில் இருந்து நீண்ட தொலைவு உள்ளதால் அரசு அதிகாரிகளும் இப்பகுதியை புறக்கணித்து வருவதாகவும் பொதுநல அமைப்பைச் சேர்ந்தவர்களும் புகார் கூறுகின்றனர்.
விழுப்புரம் தனி மாவட்டமாக செயல்பட தொடங்கி 20 ஆண்டுகளுக்கு மேலாகிறது. ஆயினும் இம்மாவட்ட வளர்ச்சிக்கு அடிப்படையான திட்டங்களை மத்திய, மாநில ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவர்கள் உருவாக்கவில்லை எனவும், இதன் விளைவாக வேலைவாய்ப்பு, கல்வியில், சுகாதாரத்தில் பின்தங்கிய மாவட்டமாகவும், வறுமையும், குடிசைகளும் நிறைந்த மாவட்டமாகவும் இம்மாவட்டம் நிலவுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி கோட்டத்துக்குட்பட்ட சின்னசேலம், சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி வட்டங்களை சேர்ந்த கிராம மக்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் சென்று வருவதில் சிரமம் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
எனவே தான் கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் கோட்டத்தை உள்ளடக்கிய திட்டக்குடி, வேப்பூர், விருத்தாசலம் வட்டங்களையும், கள்ளக்குறிச்சி கோட்டத்துக்குட்பட்ட உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் உள்ளிட்ட வட்டங்களையும் இணைத்து புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. இதன்மூலம் விருத்தாசலம், திட்டக்குடி, உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 6 சட்டப் பேரவைத் தொகுதிகளும் புதிய மாவட்டத்துக்குள் அடங்கும்.
சாத்தியக் கூறுகள் உள்ளதா?
இதுதொடர்பாக விருத்தாசலம் முன்னாள் எம்எல்ஏ குழந்தை தமிழரசன் கூறுகையில், “விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்க வேண்டும் என 1997-ம் ஆண்டிலேயே சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்துள்ளேன். விருத்தாசலம் ஏற்கெனவே வருவாய் கோட்டமாக உள்ளது. மேலும் திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு செல்லும் சாலை மார்க்கத்தின் முக்கிய வழித்தடத்தில் அமைந்துள்ளதோடு, தென்மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான ரயில்கள் விருத்தாசலம் ஜங்ஷன் வழியாகத்தான் செல்கிறது. மேலும் பிரசித்திப் பெற்ற விருத்தகிரீஸ்வரர் ஆலயம், கொளஞ்சியப்பர் ஆலயம் உள்ளிட்ட சிறப்பு வாய்ந்த வழிப்பாட்டுத் தலங்கள் உள்ளது எனவே மாவட்டத் தலைமையிடமாக அறிவிப்பதில் சிக்கல் எதுவுமில்லை” என்றார்.