

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்தும், ஜெயலலிதாவை விடுவிக்கக் கோரியும் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இதே கோரிக்கையை வலியுறுத்தி சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நேற்று காலையில் திடீர் மறியல் செய்தனர். ஏராளமான மாணவிகளும் இதில் கலந்து கொண்டனர். சுமார் அரை மணி நேரம் நடந்த போராட்டத்தால் மெரினா சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
விரைந்து வந்த போலீஸார் போக்குவரத்தை மாற்றுப்பாதையில் திருப்பிவிட்டனர். பின்னர் மாணவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட வைத்தனர். இதனால் மெரினா சாலையில் சுமார் ஒரு மணி நேரம் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.