

ஜனநாயகம் என்பது வாக்களிப்பது மட்டுமல்ல. அரசின் நடவடிக்கைகளில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் என்று மாநிலங்களவை உறுப்பினர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் கூறினார்.
அறிவியல்பூர்வமான ஜன நாயகம் குறித்து சென்னையில் நேற்று நடந்த கருத்தரங்கில் சுதர்சன நாச்சியப்பன் கூறியதாவது:
கடந்த 7 ஆண்டுகளாக மனித உரிமைகள் மற்றும் உலக வளர்ச்சிக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பு மூலம் இதுபோன்ற கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வந்தன. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே நடத்தப்பட்டு வந்த இந்தக் கருத்தரங்கங்களில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.
இனிவரும் காலங்களில், ‘சென்டர் ஃபார் டெமாக்ரஸி’என்ற மையத்தின் சார்பில் பொதுமக்களும் பங்கேற்கும் வகையில் கலந்துரையாடல் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்படும். அதன் முதல்கட்டமாகத்தான் பல்துறை வல்லுநர்கள் கலந்துகொள்ளும் வகையில் ‘அறிவியல்பூர்வமான ஜனநாயகம்’ என்ற தலைப்பில் இந்த கருத்தரங்கு நடக்கிறது. இதைத் தொடர்ந்து திருச்சி, மதுரையிலும் கருத்தரங்கு நடத்தப்படும். எதிர்காலத்தில் மாவட்ட தலைநகரங்களில் நடத்த உள்ளோம்.
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்களிப்பது மட்டுமே ஜனநாயகத்தில் பங்கேற்பது ஆகாது. அரசின் நடவடிக்கைகளில் பொதுமக்கள் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும். அத்தகைய பங்கேற்புதான் உண்மையான ஜனநாயகமாகும்.
இவ்வாறு சுதர்சன நாச்சியப்பன் கூறினார்.
கருத்தரங்கில் பங்கேற்ற ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பெல்லியப்பா கூறும்போது, ‘‘கருத்து வேறுபாடு கொள்வதுதான் ஜனநாயகத்தின் சாரம். வெவ்வேறு கருத்து கொண்டவர்கள் அதைப் பற்றி பேசி, விவாதித்து கலந்தாலோசித்து இறுதியில் ஒரு முடிவுக்கு வருவார்கள். அப்படி எடுக்கப்படும் முடிவு மிகவும் சரியானதாகவும், நீடித்த தீர்வு தருவதாகவும் அமையும்’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில் எப்.இ.எஸ். அமைப்பின் ஆலோசகர் ராஜேஷ்வர தயாள், வழக்கறிஞர் ஜெபராஜ், திரைக்கலைஞர் இரா.முருகன், ‘தேசிய முரசு’ ஆசிரியர் ஏ.கோபண்ணா, சென்னை பல்கலைக்கழக இதழியல் துறை தலைவர் ஜி.ரவீந்திரன், எழுத்தாளர் டி.ரவிக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.