

தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணம் பள்ளி தீ விபத்தில் பலியான 94 குழந்தைகளின் 12-ம் ஆண்டு நினைவு தினமான நேற்று குழந்தைகளை இழந்த பெற்றோர் கள், தீக்காயம் அடைந்த மாண வர்கள், பல்வேறு அரசியல் கட்சி யினர், பொதுமக்கள் பள்ளியின் முன்பும், நினைவு மண்டபத்திலும் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி கும்பகோணம் காசி ராமன் தெருவில் அமைந்திருந்த கிருஷ்ணா பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் பலியா கினர், 18 பேர் தீக்காயங்களுடன் உயிர் தப்பினர். இச்சம்பவத்தின் 12-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
தீ விபத்தில் இறந்த 94 குழந் தைகளின் படங்கள் அச்சிடப்பட்ட பதாகை கிருஷ்ணா உதவி பெறும் தொடக்கப் பள்ளியின் முன் நேற்று வைக்கப்பட்டிருந்தது. குழந்தைகளை இழந்த பெற்றோர் கள் சங்கம் சார்பில் மலர் தூவி, அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது, பெற்றோர்களும், உறவினர்களும் கதறி அழுதனர்.
தீயில் கருகி உயிரிழந்த குழந் தைகளின் படங்களுக்கு தீக்கா யத்துடன் உயிர் தப்பிய மாணவ, மாணவிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, குழந் தைகளை இழந்த பெற்றோர்கள் பள்ளியில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு பாலக்கரையில் உள்ள நினைவு மண்டபத்துக்குச் சென்று அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். நேற்று காலை முதல் மாலை வரை, அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக் கள் அஞ்சலி செலுத்தினர்.
பெற்றோர்கள் மாலையில் ஊர்வலமாகப் புறப்பட்டு மகாமக குளத்துக்குச் சென்று மோட்ச தீபம் ஏற்றினர். கும்பகோணம் சார் ஆட்சியர் கோவிந்தராவ், நகர்மன்றத் தலைவர் (பொ) ராஜாநடராஜன் திமுக மாவட்டச் செயலாளர் கல்யாணசுந்தரம், அதிமுக எம்பி பாரதிமோகன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர். அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களை இழுத்து மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் தீ விபத்து நடந்த பள்ளியின் முன் முழக்கமிட்டனர்.