

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சமக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த அந்தோணி சேவியரின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அதைக் கண்டித்து மறியலில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் இரு அணிகள், திமுக, தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக, நாம் தமிழர், நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி (சமக) ஆகிய அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் சார்பில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது. இதில் சமக வேட்பாளர் அந்தோணி சேவியர் மற்றும் அவரது மாற்று வேட்பாளர் ஆகியோரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
அதைக் கண்டித்து, சமக தொண்டர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் எதிரே, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் 200-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்து வண்ணாரப்பேட்டையில் உள்ள திருமணக் கூடம் ஒன்றில் அடைத்து வைத்தனர்.
இது தொடர்பாக சமக வேட்பாளர் அந்தோணி சேவியரிடம் கேட்டபோது, எனது வேட்பு மனுவை 10 பேர் முன்மொழிந்தனர். அதில் ஒருவரின் வாக்காளர் அடையாள அட்டை, ராயபுரம் தொகுதியில் வருவதாக கூறி, எனது வேட்புமனுவை நிராகரித்தனர். அதே காரணத்தை கூறி, மாற்று வேட்பாளரின் மனுவையும் நிராகரித்தனர். அதைக் கண்டித்து மறியலில் ஈடுபட்டோம் என்றார்.