எலும்பும், தோலுமாக காணப்படும் காட்டு யானைகள்: தமிழகத்தில் வறட்சியால் ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறை காரணமா?

எலும்பும், தோலுமாக காணப்படும் காட்டு யானைகள்: தமிழகத்தில் வறட்சியால் ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறை காரணமா?
Updated on
2 min read

உருவத்தில் பிரம்மாண்டமாக இருந்தாலும் மனிதர்களுக்கு அச் சத்தை ஏற்படுத்தாத விலங்கு யானை. ஆனால், சமீப காலமாக மனிதர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் விலங்காகவும், குடியிருப்புகள், விவசாயத் தோட்டங்களை நாசம் செய்யும் கொடூர விலங்காகவும் யானை சித்திரிக்கப்படுகிறது.

கடந்த கால் நூற்றாண்டுக்கு முன்பு வரை, யானைகள் காடு களை விட்டு வெளியேறாமல், குடியிருப்பு பகுதிகளுக்கு படையெடுக்காமல் இருந்தன. என்றைக்கு யானைகளின் வாழ் வியல் சூழலை மனிதன் ஆக்கி ரமித்தானோ அன்றிலிருந்து தொடங்கியது பிரச்சினை. காடுகள் அழிப்பால் மழையின்றி யானைகளுடைய வாழ்விடங்களில் தண் ணீர், உணவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் இயற்கையோடு இணைந்து வாழ்ந்த யானைகள், தங்கள் வாழ்விடங்களை விட்டு தற்போது இடம்பெயர்ந்து உணவு, தண்ணீரைத் தேடி ஊருக்குள் வர ஆரம்பித்துள்ளதாக யானை ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் காட்டு யானைகளின் எண்ணிக்கை சுமார் 9,950 முதல் 15,080 வரை இருக்கிறது. தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திண்டுக்கல், கோவை, ஈரோடு, திருநெல்வேலி உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளது.

இந்நிலையில், கடந்த ஆண்டும் வடகிழக்கு, தென்மேற்குப் பருவமழை பொய்த்ததால் வழக்கத்துக்கு மாறாகக் காடு களில் வறட்சி ஏற்பட்டுள்ளது. காட்டாறுகள், அருவிகள் வறண்டு தண்ணீருக்கும், உணவுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. அதனால், யானைகள் ஊருக்குள் புகுவது அதிகரித்துள்ள நிலையில், அப்படி வரும் யானைகள் எலும்பும், தோலுமாக உடல் மெலிந்த நிலையில் பார்க்க பரிதாபமாக காணப்படுகிறது.

காடுகளுக்கு உள்ளே திரியும் யானைகளும் மெலிந்து காணப் படுவதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து யானைகள் ஆராய்ச்சியாளரும், கால்நடை மருத்துவருமான சி. அறிவழகன் கூறியது: தற்போது, தமிழகத்தில் நிலவும் அதிக வெப்பமான சூழல் யானைகளுக்கு உகந்ததாக இல்லை. அவை உடல் மெலிந்து காணப்படுவதற்கு அது காரணம் இல்லை. எத்தனை வறட்சி ஏற்பட்டாலும், உணவு இல்லாத சூழல் யானைகளுக்கு ஏற்படாது. அதன் வாழ்நாளில் எத்தனையோ வறட்சியை கடந்திருக்கும். அதற்கு தகுந்தாற்போல தன்னுடைய இடப்பெயர்ச்சி பகுதியையும், சீசனுக்கு தகுந்தபடி உணவு பழக்க முறையையும் யானைகள் மாற்றிக் கொள்ளும் திறன் படைத்தவை.

வறட்சிக்கு தகுந்தபடி, ஒரு தமிழக யானை சாதாரணமாக 600 முதல் 650 சதுர கிமீ தூரம் வரை இடம் பெயரும். யானைகள் உணவும் சீசனுக்கு தகுந்தாற்போல மாறும். யானைகள் 80 சதவீதம் புற்களைத்தான் உட்கொள்ளும். புல்லின் வேர்ப்பகுதியில் மண் மண்டி காணப்படும். மண்ணோடு புல்லை சாப்பிட்டால் யானைகளின் பற்கள் தேய்மானம் அடையும்.

யானைகளுக்கு பல்தான் உயிர்நாடி. பல் போய்விட்டால் அதன் வாழ்நாள் முடிந்துவிடும். அதனால், யானைகள் மழை நே ரத்தில் புல்லைப் பறித்து வேரை அப்புறப்படுத்திவிட்டு புல்லை மட்டும் சாப்பிடும். வெயில் காலத்தில் புற்கள் காய்ந்து சாப்பிடத் தகுதியான சத்தான உணவாக இருக்காது. அதனால், மேலே உள்ள புற்களை அப்புறப்படுத்தி விட்டு மண்ணையும் உதறிவிட்டு வேரை மட்டும் தனியாக பிரித்து சாப்பிடும். யானைகளுக்கு சத்துணவு முக்கியம். அதனால், கீழே உள்ள வேரை சாப்பிடுகிறது. வெயில் காலத்தில் போதுமான உணவு கிடைக்காது. யானைகள் இந்தக் காலத்தில் மரப்பட்டை, இலைகளை சாப்பிட ஆரம்பிக்கும். இயற்கையாகவே கோடை காலத்தில் யானைகள் எலும்புகள் தெரியும்படி மெலிந்து காணப்படும். இது அந்த சீசனில் ஏற்படக் கூடிய உடல் மாற்றம்தான்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மாவட்ட வனத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, யானைகள் ஒரு நாளைக்கு 250 முதல் 300 லிட்டர் தண்ணீர் குடிக்கும். கோடையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், உடல் மெலிந்து காணப்படும். இது எல்லா ஆண்டும் யானைகளுக்கு கோடையில் ஏற்படும் உடல்நிலை மாற்றம்தான் என்றார்.

யானைகளின் ரகசிய தகவல் தொடர்பு

யானைகள், உணவுக்காக மற்றொரு இடத்துக்குச் செல்லும்போது தாய், தனது குட்டிகளுடன் குடும்பமாகவும், ஒரு பகுதியில் வாழும் ஒட்டுமொத்த யானை குடும்பங்களோடு சேர்ந்தும் செல்லும். அப்படி செல்லும் சில நேரங்களில் அவற்றுக்கான உணவு கிடைக்காமல் போகும். அதனால், அவை உணவுத்தேடி செல்லும் இடத்தில் சிறு சிறு குழுக்களாக பிரிந்து விடும். சாப்பிட்டு முடிந்ததும், மீண்டும் அருகில் உள்ள நீர்நிலைகளில் ஒன்று கூடும். இப்படி அவை ஓரிடத்தில் சந்திக்க இன்பெராசோனிக் (infrasonic) என்ற தகவல் தொடர்பு சமிக்ஞையை பயன்படுத்துகிறது. அதை மனிதர்களால் கேட்க முடியாது. யானைகளுக்கு காது பெரிதாக இருப்பதால், அவை மனிதர்களால் கேட்டு உணரமுடியாத இந்த சத்தங்களை தங்களுக்குள் தகவல் தொடர்புக்கு பயன்படுத்துவதாக அறிவழகன் மேலும் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in