கும்பகோணம் நகர தெருக்களை சுத்தம் செய்யும் இளைஞர் குழு

கும்பகோணம் நகர தெருக்களை சுத்தம் செய்யும் இளைஞர் குழு
Updated on
1 min read

கும்பகோணம் நகர தெருக்களை ‘இது நம்ம தெரு’ என வாரந்தோறும் சுத்தம் செய்து பராமரிக்க முடிவு செய்துள்ளனர் இப்பகுதி இளைஞர்கள்.

கும்பகோணத்தில் 45 வார்டுகளில் 500-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களில் குப்பை ஆங்காங்கே தேங்குகிறது. நகராட்சிப் பணியாளர்கள் தினமும் சுத்தம் செய்தாலும், தெருவாசிகளின் ஒத்துழைப்பு குறைவாகவே உள்ளது.

இந்நிலையில், வெளியூர்களில் வேலை பார்க்கும் கும்ப கோணத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வாரந்தோறும் சொந்த ஊரான கும்பகோணத்துக்கு வரும்போது, ஊரை சுத்தம் செய்ய வேண்டும் என முடிவு செய்தனர். இதற்காக இந்த இளைஞர்கள் ‘கும்பகோணம் ரைசிங்’ என்ற அமைப்பை உருவாக்கினர். அதன் ஒருங்கிணைப்பாளராக ஸ்ரீதர் என்பவர் உள்ளார். இந்தக் குழுவில் தற்போது 10 இளைஞர்கள் சேர்ந்துள்ளனர்.

இவர்கள் தெருக்களை சுத்தம் செய்ய நகராட்சி ஆணையரிடம் அனுமதி கேட்டபோது, ஆணையர் உமாமகேஸ்வரி இந்த இளைஞர்களின் முயற்சியை ஊக்குவித்து, தேவையான வசதிகளை செய்து தருவதாக கூறியுள்ளார்.

இதையடுத்து, கும்பகோணம் குஞ்சிதபாதம் தெருவை நேற்று முன்தினம் சுத்தம் செய்து, குப்பையை அகற்றினர்.

மேலும், தெருவோரம் உள்ள சுவர்களில் சொந்த நிதியில் சுண்ணாம்பு அடித்து அதில் சுற்றுச்சூழல், மரம் வளர்ப்பு, விவசாயம், நீர்நிலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஓவியங்களையும் வரைந்துள்ளனர்.

சுத்தம் செய்யப்படும் தெருவுக்கு ‘இது நம்ம தெரு’ என தலைப்பிட்டு சுகாதாரத்தை பாதுகாக்க முடிவு செய்துள்ளதாகவும், இனி வாரந்தோறும் ஒவ்வொரு தெருவையும் சுத்தம் செய்ய உள்ளதாகவும் இந்தக் குழுவில் ஈடுபட்டுள்ள பிரகாஷ் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in