உள்ளாட்சித் தேர்தலுக்கு விண்ணப்பிக்க கோவை அதிமுகவில் ஆர்வம்; திமுகவில் சுணக்கம்

உள்ளாட்சித் தேர்தலுக்கு விண்ணப்பிக்க கோவை அதிமுகவில் ஆர்வம்; திமுகவில் சுணக்கம்
Updated on
2 min read

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விண்ணப்பம் அளிப்பதில் கோவை அதிமுகவினர் மத்தியில் அதிக ஆர்வமும், திமுகவினர் மத்தியில் சுணக்க நிலையும் நிலவியதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.

விரைவில் நடக்க உள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தலுக்கு அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் விண்ணப்பம் பெறும் பணியை முனைப்புடன் செய்து வருகின்றன. அதிமுக, கடந்த 16-ம் தேதி முதல் விண்ணப்பம் பெறும் பணியை மாவட்ட தலைமையகங்களில் தொடங்கியது. உள்ளாட்சிப் பதவிகள் 50 சதவீதம் பெண்களுக்கு என்ற நிலையில் சந்திக்கும் முதலாவது தேர்தல் என்பதாலும், சமீபத்திய சட்டப்பேரவைத் தேர்தல் கொடுத்த வெற்றியாலும் அதிமுகவினர் மத்தியில் எழுச்சி ஏற்பட்டுள்ளது. தொடக்கம் முதலே குடும்பம் குடும்பமாக வந்து விண்ணப்பம் பெற்று, பூர்த்தி செய்து அளித்தனர் அக்கட்சியினர்.

ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என்று பல நிலைகளிலும் உள்ள பெரும்பான்மை வார்டுகளில் குறைந்தபட்சம் 10 முதல் 20 விண்ணப்பங்கள் வந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர் கட்சி நிர்வாகிகள். விண்ணப்பம் அளிக்க கடைசி நாளான நேற்றும், நேற்று முன்தினமும் கோவை அதிமுக கட்சி அலுவலகத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

திமுகவில் கடந்த 19-ம் தேதி முதல் விண்ணப்பம் வாங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடைசி நாள் 22-ம் தேதி (நேற்று) என தெரிவிக்கப்பட்டிருந்தது. திடீரென அக்கட்சித் தலைமை கடைசி நாளை மேலும் 2 நாட்களுக்கு நீட்டிப்பு செய்து அறிவித்ததால், அதிமுகவிலும் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்படும் என்ற பேச்சு பரவியது. ஆனால், அடுத்தடுத்த நாட்கள் அஷ்டமி, நவமியாக இருப்பதால், யாரும் விண்ணப்பிக்கமாட்டார்கள். நீட்டிப்பை தலைமையும் விரும்பாது என்று அதிமுகவினர் தெரிவித்தனர்.

திமுகவில் குழப்பங்கள்

அதேசமயம், திமுகவில் விண்ணப்பம் பெறும் இடங்களில் கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் குழப்பங்கள் நிலவின.

இது குறித்து திமுக கட்சி பிரதிநிதிகள் சிலர் கூறியதாவது: கடந்த 3 நாட்களில் மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கு 250-ல் இருந்து 300 விண்ணப்பங்கள் வந்திருந்தாலே அதிகம். நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளிலும் இதே நிலைதான். ஆண், பெண் மற்றும் ரிசர்வ் வார்டுகள் எவை என்று தெளிவாகத் தெரியவில்லை. எந்த வார்டில் யார், யாருக்கு மோதல் என்பதும் புரியவில்லை.

போதாக்குறைக்கு, கோவை மாவட்டம் நகராட்சி நிர்வாகங்களின் அமைச்சர் வேலுமணி உள்ள பகுதி. 100-க்கு 100 சதவீதம் வார்டுகளைக் கைப்பற்றி மொத்த உள்ளாட்சி மன்றங்களையும் கைப்பற்றுவதற்கு அத்தனை உத்திகளையும் வகுத்துவிட்டார்.

திமுகவுடன் கூட்டணிக்கு தமாகா, காங்கிரஸ், கொமதேக என பல கட்சிகளும் வருகின்றன. அவர்களுக்கு எந்தெந்த வார்டுகள், அவர்களை எல்லாம் சேர்க்கத்தான் வேண்டுமா என்ற கோபம் காலங்காலமாக கட்சிக்காக உழைப்பவர்கள் மத்தியில் உள்ளது. அதே சமயம், விண்ணப்பம் பெறப்போகும்போதே அதை அளிக்கும் நிர்வாகிகள் வார்டுக்கு எத்தனை செலவு செய்ய முடியும்? குறைந்தபட்சம் ரூ.20 லட்சம் செலவளிக்க வேண்டி வரும், முடியுமா? என்று கேட்கிறார்கள். கட்சிக்காக பாடுபட்ட தொண்டர்கள் இக் கேள்விகளால் விலகிப் போகிறார்கள்.

அதேநேரத்தில், கட்சிக்குள் புதிதாக வந்த புதுப்பணக்காரர்களுக்கு சுலபமாக விண்ணப்பம் அளிக்கிறார்கள். இவருக்குத்தான் ‘சீட்’ என்று முக்கிய நிர்வாகிகளே வெளிப்படையாக ‘கமென்ட்’ அடிக்கவும் செய்கிறார்கள். இதனால் உண்மைத் தொண்டன் கோபத்தில் இருக்கிறான் என்று தெரிவித்தனர் பல்வேறு கோஷ்டியினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in