

தமிழகத்தில் புற்றீசல்போல நீட் தேர்வு பயிற்சி மையங்கள் அதிகரித்துள்ளன. இந்த மையங்களில் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த விஷயத்தில் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரி களின் மாநில அரசு ஒதுக்கீட்டு இடங் களுக்கு நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு கோரும் சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை. அதனால், தமிழகத்தில் மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் நடக்குமா? கடந்த ஆண்டுபோல பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் நடக்குமா என்பது இன்னும் முடிவாகவில்லை.
அதேநேரம், தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழக இடங்களுக்கு நீட் தேர்வு கட்டாயமாகியுள்ளது. எனவே, மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் அனைத்து மாணவர்களும் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இதன் காரணமாக, தமிழகம் முழுவதும் பயிற்சி மையங்களும் அதிகரித்து வருகின்றன.
இதுதொடர்பாக அரசு டாக்டர்கள், மருத்துவ பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பு செயலாளர் டாக்டர் ஏ.ராமலிங்கம் கூறியதாவது:
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மட்டும் கடந்த ஆண்டு சில நீட் பயிற்சி மையங்கள் செயல்பட்டன. இந்த ஆண்டு தமிழகம் எங்கும் புற்றீசல்போல பெருகிவிட்டன. சென்னையில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன. மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங் களிலும் பயிற்சி மையங்கள் அதிகரித்துள் ளன. ஜேஇஇ, எஇஇஇ போன்ற பயிற்சி வகுப்புகளை நடத்தி வருபவர்களும் தற்போது கூடுதலாக நீட் தேர்வுக்கும் பயிற்சி அளிக்கின்றனர். கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு மாணவர்களைச் சேர்க்கின்றனர்.
இந்த மையங்களில் நீட் தேர்வுக்கான பயிற்சி 2 மாதம் முதல் 3 மாதம் வரை வழங்கப்படுகிறது. இதற்கு தங்கள் இஷ்டப்படி ரூ.15 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கின்றனர். இவற்றில் எந்த மையம் சிறந்தது என்று கண்டுபிடிப்பது சிரமம். பெற்றோர் தங்கள் வசதிக்கேற்ப பிள்ளைகளைப் பயிற்சி மையங்களில் சேர்க்கின்றனர். தமிழகத்துக்கு நீட் தேர்வு கட்டாயமாகிவிட்டால், பயிற்சி மையங்கள் எண்ணிக்கை அடுத்த ஆண்டு மேலும் அதிகரிக்கும். இதைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாமக்கல், ஈரோடு, சேலம் போன்ற மாவட்டங்களில் தனியார் பள்ளி களிலேயே மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அனுமதி பெற தேவையில்லை
லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷனல் கன்சல்டன்ட்ஸ் நிர்வாக இயக்குநர் முகமது கனி கூறியதாவது:
நீட் தேர்வு பயிற்சி மையம் தொடங்க எந்த அனுமதியும் வாங்கத் தேவையில்லை. அதனால்தான் பயிற்சி மையங்கள் அதிகரிக்கின்றன. நீட் தேர்வில் வெற்றி பெற, இந்த 2 மாத கால பயிற்சியில் சேருவது மட்டுமே போதாது.
அப்படியே வெற்றி பெற்றாலும் தகுதிப் பட்டியலில் மேலே வருவது கடினம். தகுதிப் பட்டியல் அடிப் படையில்தான் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கும். கடந்த ஆண்டு தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தகுதிப் பட்டியலில் இடம்பிடித்தனர். ஆனால் அவர்களில் 118 பேருக்கு மட்டுமே இடம் கிடைத் தது.
பெற்றோர் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பள்ளிகள், பயிற்சி மையங்களோடு இணைந்து நடத்தும் பயிற்சி வகுப்பில் சேர்ந்து நீட் தேர்வுக்கு தயாராவதுதான் சிறந்தது. டாக்டராக வேண்டும் என்ற கனவில் இருக்கும் மாணவர்கள் 8-ம் வகுப்பில் இருந்தே தங்களைத் தயார்படுத்திக் கொள்ளவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.