

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் தொடர்ந்து பயங்கர தீ பரவி வருவதால், திருமலைக்கு மலைவழிப் பாதை மூலம் வரும் பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் கடந்த 4 நாட்களாக தீ பரவி வருகிறது. இதில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் தீ வேகமாக பரவி வருவதால் பல ஏக்கர் மரங்கள் தீயில் கருகின. வனத்துறை அதிகாரிகள், தேவஸ்தான ஊழியர்கள், தீயணைப்பு படையினர் ஆகியோர் இந்த காட்டு தீயை அணைக்க முயன்றும் இயலவில்லை.
இந்நிலையில் புதன்கிழமையும் தீயை அணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. திருமலையில் இருந்து 7 டேங்கர்களும், திருப்பதியில் இருந்து 10 டேங்கர்களும் அனுப்பி வைக்கப்பட்டன. சுமார் 300 ஊழியர்கள் தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர். அனல் காற்று பலமாக வீசுவதால் தீயை அணைக்கும் பணி சவாலாக உள்ளது.
தீக்கு பயந்து வனப்பகுதியில் உள்ள புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை, மான் உள்ளிட்ட மிருகங்கள் மற்றும் விஷப் பாம்புகள் நடைப்பாதையில் வரலாம் என தேவஸ்தான அதிகாரிகள் கருதியதால், மலைவழிப் பாதையில் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. பாபவிநாசம், ஆகாச கங்கை போன்ற இடங்களுக்கு செல்லும் வழிகளும் அடைக்கப்பட்டன.
இதுபோல கோருட்லா, காகுலகொண்டா வனப்பகுதியிலும் தொடர்ந்து தீ வேகமாக பரவி வருகிறது. தீயணைப்பு படையினரால் தீயை கட்டுபடுத்த இயலவில்லை.
இது குறித்து தேவஸ்தான நிர்வாக அதிகாரி எம்.ஜி. கோபால் கூறுகையில், “தீயணைக்கும் பணியில் ஹெலிகாப்டரை பயன்படுத்த முயன்று வருகிறோம். தீயை முழுமையாக அணைக்க அனைத்து ஏற்பாடுகளும் விரைந்து மேற்கொள்ளப்படும்” என்றார்.