

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட தம்பதி மற்றும் அவர்களின் மகள்களை வீட்டோடு எரித்துக் கொல்ல முயற்சி நடந்துள்ளது. வேலைக்கு சென்று பெற்றோரை காப்பாற்றும் மகளை கேலி செய்தே கொடுமைபடுத்துகின்றனர் அத்தெருவில் வசிக்கும் மக்கள்.
சென்னை பள்ளிக்கரணை நாராயணபுரம் காமாட்சியம்மமன் நகரைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கும். அவர்களது மூத்த மகளுக்கும் எய்ட்ஸ் பாதிப்பு உள்ளது. 15 வயதாகும் இரண்டாவது மகளுக்கு அதிர்ஷ்டவசமாக இந்த பாதிப்பு இல்லை.
பெற்றோரும் மூத்த மகளும் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்க, இளைய மகள் மட்டும் அருகே உள்ள ஜவுளி நிறுவனத்தில் வேலைக்கு செல்கிறார். அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து குடும்பத்தையே காப்பாற்றி வருகிறார். ஆனால், சிறுமி வேலைக்கு செல்லும்போதும் திரும்பி வரும்போதும் அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் ‘எய்ட்ஸ் போகிறது பார்’ என்று கேலி, கிண்டல் செய்துள்ளனர். மனிதாபிமானம் இல்லாத அந்த கயவர்களின் கேலியால் துவண்டுபோன சிறுமி, பெற்றோரிடம் கூறி அழுதிருக்கிறார். ஆனாலும் வேறு வழியின்றி கேலியையும் கிண்டலையும் தாங்கிக் கொண்டு வேலைக்கு சென்று வருகிறார்.
இந்த குடும்பத்தினரை அவர்கள் வசிக்கும் பகுதியை சேர்ந்த மக்கள் அடித்து துன்புறுத்தி வருகிறார்களாம். ‘உங்களை வீட்டோடு வைத்து எரித்துக் கொல்லப் போகிறோம்’ என்று சிலர் மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன குடும்பத்தினர், தினமும் இரவில் அருகே உள்ள கோயில் வளாகத்துக்கு சென்று படுத்து தூங்குகின்றனர். இந்நிலையில், கடந்த 8-ம் தேதி அவர்களது வீட்டை ஒரு கும்பல் தீ வைத்து எரித்துவிட்டது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் அனைவரும் உயிர் தப்பினர்.
பொதுமக்களின் கொடுமை களை தாங்க முடியாத தம்பதியினர், புதன்கிழமை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்து தாங்கள் படும் வேதனைகள் குறித்து புகார் கொடுத்தனர். பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘வீட்டருகே வசிக்கும் சிலர் எங்களை அதிகம் காயப்படுத்துகின்றனர். இதுபற்றி போலீஸில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எங்கள் வீட்டை எரித்தபோது புகார் கொடுக்க சென்றோம். அதையும் வாங்க போலீஸார் மறுத்துவிட்டனர்’’ என்று கூறினர்.
இந்தக் கொடுமை பற்றி எழுத்தாளர் ஞாநியிடம் கேட்ட போது, ‘‘இது வெட்கித் தலை குனிய வேண்டிய செயல். அரசின் விளம்பரங்கள் மக்களை சென்றடையவில்லை என்பதையே இது காட்டுகிறது. எய்ட்ஸை விடவும் பெரிய உயிர்க் கொல்லி நோய் நீரழிவுதான். எய்ட்ஸை ஒழுக்கத்துடன் தொடர்புபடுத்தி பார்க்கின்றனர். ஆனால், மிகவும் ஒழுக்கக்கேடான மது அருந்து வதை மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை’’ என்றார்.
எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர் களுடன் பேசுவது, அவர்களுடன் சேர்ந்து சாப்பிடுவது, தொடுவது, அவர்கள் பயன்படுத்திய பொருட்களை நாம் பயன்படுத்துவது போன்ற எந்தக் காரணங்களாலும் இந்த நோய் பரவாது. எய்ட்ஸால் பாதிக்கப் பட்டவர்களுக்கு மற்றவர்களின் அரவணைப்பும், ஆதரவும்தான் முதலில் தேவை.