Published : 15 Mar 2014 12:00 AM
Last Updated : 15 Mar 2014 12:00 AM

என் பேச்சை கேட்கறீங்க; ஆனா ஓட்டுப் போடமாட்டேங்கிறீங்க!- கும்மிடிப்பூண்டியில் விஜயகாந்த் பேச்சு

கும்மிடிப்பூண்டி பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய விஜயகாந்த் ‘என் பேச்சைக் கேட்கறீங்க ஆனா ஓட்டு மட்டும் போட மாட்டேங்கிறீங்க’ என்றார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெள்ளிக்கிழமை திருவள்ளூர் தொகுதிக்கு உட்பட்ட கும்மிடிப்பூண்டியில் முதல் கட்டப் பிரச்சாரத்தைத் தொடங்கினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:

ஆண்ட கட்சியாக இருந்தாலும் ஆளும் கட்சியாக இருந்தாலும் இதுவரை பெரிய அளவில் எதுவும் செய்யவில்லை. எந்த மாற்றமும் ஏற்படவில்லை. உளுந்தூர் பேட்டையில் ஊழல் ஒழிப்பு மாநாடு நடத்தினோம். மாற்றம் வேண்டும் என்றால் தேமுதிகவுக்கு ஆதரவு அளியுங்கள்.

சாலையில் செல்லும்போது என் பையில் இருக்கும் பணம் மற்றொருவர் பையில் விழும் அளவுக்கு சாலைகள் மேடும் பள்ளமுமாக உள்ளன. அதிமுக, இருண்ட தமிழகத்தை மீட்பதாகச் சொன்னது. ஆனால் இதுவரையில் மின்தடை ஒழிந்த பாடில்லை. நான் கோபப்பட்டு அதிமுகவில் இருந்து வெளியேறியதாகச் சொல்கிறார்கள். ஆனால் கோபமே படாமல் இருந்த கம்யூனிஸ்டுகளின் இன்றைய நிலை என்ன?

விவசாயப் பொருள்களுக்கு போது மான அளவு விலை நிர்ணயிப்பதில்லை. ஆனால் டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் தீபாவளி, பொங்கல்ன்னா விற்பனை இலக்கு வைக்கிறார்கள். இதைத்தான் நான் எப்போதும் சொல்லிக் கொண்டு வருகிறேன். ஆனால் ஓட்டை மட்டும் மாற்றிப் போட்டு விடுகிறீர்கள். (மக்கள் சிரிப்பு)

ஓட்டுக்குப் பணம் கொடுத்தா வாங்கிக்கங்க. ஆனால் ஓட்டை மட்டும் தேமுதிகவுக்குப் போடுங்க. தமிழகத்தில் போலீஸார் வீட்டிலேயே கொள்ளை நடக்கும் அவலம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

வெளிநாட்டில் உள்ள கருப்புப் பணத்தை மீட்க வேண்டும் என்று சொல்கிறார்கள். முதலில் உள்நாட்டில் உள்ள கருப்புப் பணத்தை மீட்க வேண்டும். சட்டமன்றத்தில் இதுவரை ஜெயலலிதா 110 விதியின் 110 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதேபோல் 110 முறை பெங்களூர் கோர்ட்டிலும் வாய்தா வாங்கியுள்ளார். அந்த வழக்கை வாதாடக் கூடிய வழக்கறிஞரும் உடல்நலம் சரியில்லை என்று வாய்தா வாங்கிக் கொண்டிருக்கிறார்.

இதெல்லாம் மக்களை ஏமாற்றக் கூடிய செயல். மின்சாரமே இல்லை ஆனால் மிக்ஸி, கிரைண்டர் கொடுக்கிறார்கள். இவையெல்லாம் மாற, எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க.

இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

பின்னர் திருவள்ளூர் தனித்தொகுதி வேட்பாளராக தேமுதிக வடசென்னை மாவட்டச் செயலாளர் யுவராஜை அறிமுகப்படுத்தி, முரசு சின்னத்தை காண்பித்து ஓட்டுப் போடும்படி கூறினார்.

5 தொகுதிக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு- பாஜக கடும் அதிருப்தி

விஜயகாந்த் பிரச்சாரத்துக்கு புறப்படும் முன்பு முதல்கட்டமாக 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேமுதிக தலைமை வெளியிட்டது. திருவள்ளூர் (தனி) வி.யுவராஜ் (வடசென்னை மாவட்டச் செயலாளர்), வடசென்னை சவுந்திரபாண்டியன் (தொழிற்சங்க பொதுச்செயலாளர்), திருச்சி ஏ.எம்.ஜி.விஜயகுமார் (மாணவரணி பொதுச்செயலாளர்), நாமக்கல் மகேஷ்வரன் (மாணவரணி முன்னாள் துணைப் பொதுச்செயலாளர்), மதுரை சிவமுத்துகுமார் (மதுரை மாவட்டச் செயலாளர்) ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். வெள்ளியன்று இரவில் பல்லாவரத்தில் பிரசாரம் செய்த விஜயகாந்த், ஆலந்தூர் சட்டப்பேரவை தொகுதியில் ஏ.எம்.காமராஜ் போட்டியிடுவார் என்று அறிவித்தார்.

தொகுதிப் பங்கீடு முடிவுக்கு வந்ததும் கூட்டணிக் கட்சிக்கான தொகுதிகளை பாஜக தேசியத் தலைவர்தான் வெளியிடுவார் என்றும் தொகுதிப் பங்கீடு அறிவிப்பு வெளியான பிறகு முழுமையான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தேமுதிக வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், வெள்ளியன்று இரவு வரை பாமகவுடன் பேச்சு நடத்திக் கொண்டிருந்த பாஜக தலைவர்கள், விஜயகாந்தின் வேட்பாளர் அறிவிப்புக்கு தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x