வெள்ளமும், வறட்சியும் தடுக்கக்கூடியவை: புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி திட்டவட்டம்

வெள்ளமும், வறட்சியும் தடுக்கக்கூடியவை: புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி திட்டவட்டம்
Updated on
1 min read

நாட்டில் ஏற்படும் வெள்ளமும், வறட்சியும் தடுக்கப்படக்கூடியவை என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த இக்ரிசாட் என்ற நிறுவனம், வேளாண் துறைக்கான புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கு வதற்காக, உள்ளூர் வானிலைக்கு ஏற்றவாறு மண் வள மேம்பாடு மற்றும் நீர்நிலை மேலாண்மையில் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகி றது. அதற்காக சென்னை கிழக்கு ரோட்டரி சங்கம் மற்றும் மற்றும் கவின்கேர் நிறுவனம் சார்பில், அந்நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் டேவிட் பெர்க்வின்சனுக்கு, ‘சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான எம்.எஸ்.சுவாமி நாதன் விருது-2016’ என்ற விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

அதில் புதுச்சேரி யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநர் கிரண் பேடி பங்கேற்று, டேவிட் பெர்க்வின்சனுக்கு சுற்றுச்சூழல் விருதை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:

நான் புதுவை துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்று 9 வாரங் கள் ஆகின்றன. ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் புதுச்சேரி நகரை சுற்றி வந்தேன். அப்போது, பிரெஞ்சு காலத்தில் கட்டப்பட்ட 95 கி.மீ. நீள மழைநீர் வடிகாலை பார்த்தேன். அவை பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்தன. இதனால்தான் புதுச்சேரியில் வெள்ளம் ஏற்படுகிறது. நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால், அங்கு வறட்சியும் ஏற்படுகிறது. இதைத் தடுக்க, ஓர் இடத்துக்கு பட்டா வழங்குவது என்றால், அது நீர்நிலை பகுதி இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே வழங்க வேண்டும் என்று நான் உத்தரவிட்டிருக்கிறேன்.

நாட்டில் ஏற்படும் வெள்ளமும், வறட்சியும் தடுக்கப்படக்கூடியவை. அரசியல்வாதிகள், மக்கள் பிரதிநிதி கள், வல்லுநர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஒன்றி ணைந்து செயல்பட்டால், வெள்ளத் தையும், வறட்சியையும் தடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் பேசும்போது, “தரிசு நில மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு வேளாண் சார்ந்த ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் டேவிட் பெர்க்வின்சனை, இந்த ஆண்டு சுற்றுச்சூழல் விருதுக்கு தேர்வு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வேளாண்மை மேம்பட இளைஞர்களை அதிக அளவில் ஈடுபடுத்த வேண்டும் என்று, புதுச்சேரியில் வசித்த அரவிந்தர் கூறியுள்ளார் என்றார்.

விருது பெற்ற டேவிட் பெர்க் வின்சன் கூறும்போது, “பழம்பெரும் வேளாண் விஞ்ஞானி, எம்.எஸ். சுவாமிநாதன் பெயரில் விருது வாங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவில் நல்ல மழை கிடைக் கிறது. ஆனால் குடிப்பதற்கும் நீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர். நீர் மேலாண்மையில் சிக்கல் உள்ளது. அதற்கான தீர்வுகளை ஆராய்ந்து வருகிறோம்” என்றார்.

சென்னை கிழக்கு ரோட்டரி சங்கத் தலைவர் அனந்த், கவின் கேர் நிறுவனத் தலைவர் சி.கே.ரங்க நாதன் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in