Published : 27 Sep 2013 15:43 pm

Updated : 06 Jun 2017 11:39 am

 

Published : 27 Sep 2013 03:43 PM
Last Updated : 06 Jun 2017 11:39 AM

எல்லாம் அப்பா பைத்தியம் சாமி பார்த்துக்குவார்!

தமிழகத்தில் கட்சிக்காரர்கள் தங்களின் கட்சித் தலைவர்களின் படங்களை சட்டை பாக்கெட்டிலும், அலுவலக அறையிலும் வைத்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் புதுச்சேரியில் முதல்வர், அமைச்சர்கள், வாரியத் தலைவர்கள் என பலரும் வைத்திருப்பது சாமியார் படத்தைதான். இவருக்காக முதல்வர் கோயிலும் கட்டியுள்ளதுதான் விசேஷம்.

புதுச்சேரி முதல்வராக இருக்கும் ரங்கசாமி, ஒருகாலத்தில் முருக பக்தர். கடந்த 90-ம் ஆண்டு அப்பா பைத்தியம் சாமிகளைச் சந்தித்தார். அதன்பின் அவரது தீவிர பக்தராக மாறினார். முக்கிய முடிவுகளுக்கு முன் சேலம் சூரமங்கலத்தில் உள்ள அப்பா பைத்தியம் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டு முக்கிய முடிவு எடுப்பார். வீட்டில் உள்ள அவரது படத்தை கும்பிடாமல் எங்கேயும் புறப்பட மாட்டார்.

நினைத்தபோதெல்லாம் சேலம் சென்று வர முடியாததால் புதுச்சேரியில் கோயில் கட்டி கடந்த ஏப்ரல் 15-ல் கும்பாபிஷேகத்தை நடத்தி முடித்தார்.

கோயில் கட்டியதுடன் தனது அலுவலகம், வீடு, கார் என அனைத்து இடங்களிலும் அவரது படம் வைத்திருக்கும் அளவுக்கு தீவிர பக்தராக மாறிய காரணம் பற்றி மூத்த என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகையில், காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த 90-ம் ஆண்டு முதல்முறையாக தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட்டு ரங்கசாமி தோல்வி அடைந்தார். அப்போது தமிழகத்தைச் சேர்ந்த அப்பா பைத்தியம் சாமியார் புதுச்சேரி வந்திருந்தார். அவரை முன்னாள் முதல்வர்கள், அரசியல் தலைவர்கள் சந்தித்து ஆசி பெறுவர். அப்போது ரங்கசாமியும் சந்தித்தார். அவரைப் பார்த்த சாமியார், "ஓராண்டில் அமைச்சராவாய்" என்றார்.

அதையடுத்து 91-ல் திமுக-ஜனதாதளம் ஆட்சி கவிழ்ந்து தேர்தல் வந்தது. அதே தொகுதியில் போட்டியிட்ட ரங்கசாமி, வெற்றிபெற்று கூட்டுறவு அமைச்சரானார். அன்று முதல் அப்பா பைத்தியம் சாமி பக்தரானார். கடந்த 2000-ம் ஆண்டு சாமிகள் ஜீவசமாதி அடைந்தார். அதன் பின்னர் சேலம் சூரமங்கலத்திலுள்ள அவரது சமாதிக்கு செல்ல தொடங்கினார். சிலை முன்பு அமர்ந்து உத்தரவு பெற்ற பிறகே அனைத்து காரியத்தையும் செய்வார். சேலம் அடிக்கடி செல்ல முடியாததால் புதுச்சேரி வீமக்கவுண்டன்பாளையத்தில் கோயில் கட்டியுள்ளார் எனக் குறிப்பிட்டார்.

இப்போது அந்த கோயில் பக்கம் சென்றால் பெரிய கதவு அமைத்து மூடியுள்ளனர். படம் எடுக்க அனுமதி கேட்டால் மறுப்பு மட்டுமே பதில். அத்துடன் கோயிலில் தரிசனம், பக்தர்களுக்கு குறிப்பிட்ட நாட்களில் தனது கையால் அன்னதானம் என தூள் கிளப்புகிறார் முதல்வர்.

அண்மையில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் ரகசிய கூட்டம் நடத்தியபோது அதை பற்றி கவலைப்படாமல் இக்கோயிலில் அன்னதானத்தில் ஈடுபட்டிருந்தார்.

அவர் வீ்ட்டில் எம்எல்ஏக்களுடன் பேச்சுவார்த்தை நடந்து முடிந்த பின்பும் இக்கோயிலுக்குச் சென்று வழிபட்டார். எந்த பிரச்சினையாக இருந்தாலும் சாமி பார்த்துக்குவார் என்பதே இவரது ஸ்டைல்.

முதல்வர் வீட்டில் இருந்து நடந்து செல்லும் தொலைவிலேயே கோயில் கட்டப்பட்டுள்ளது. முதல்வரைத் தொடர்ந்து அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், வாரியத் தலைவர்கள், என்.ஆர்.காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்கள், ஆகியோரும் சாமியாரின் பக்தர்களாகியுள்ளனர். தங்களின் கட்சித் தலைவர் படத்தை போன்றே சாமி படத்தையும் கட்சியினர் பாக்கெட், அலுவலகம், வீடு, கார் ஆகிய இடங்களில் வைத்திருக்கின்றனர். உண்மையான பக்தியா அல்லது தங்களது தலைவரை கவருவதற்காகவா என்பது அரசியலில் அடுத்த விஷயம்தானே. அதேபோல் அரசியலில் சென்டிமெண்ட்டுக்கு சிக்காதோர் யாராவது இருக்கிறார்களா என்ன...

தமிழகம், புதுச்சேரியைத் தொடர்ந்து பெங்களூரிலும் இதேபோன்று கோயிலை முதல்வர் கட்டிவருவதாக கூறுகிறார்கள் இவரது ஆதரவாளர்கள்.

இதுமட்டுமி்ல்லாமல் அதிருப்தி எம்எல்ஏக்களை அழைத்து திங்கள்கிழமை சமாதானப்படுத்திவிட்டு செவ்வாய்க்கிழமை சேலம் அப்பா பைத்தியசாமி கோயிலுக்கும், பொள்ளாச்சி அழுக்குசாமி கோயிலுக்கும் சென்றிருந்தாராம். அத்துடன் சிறப்பு பூஜையிலும் முதல்வர் ஈடுபட்டதாகத் தெரிவித்தனர்.


அப்பா பைத்தியம் சாமிசூரமங்கலம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like


More From This Category

More From this Author