Published : 06 May 2017 10:34 AM
Last Updated : 06 May 2017 10:34 AM

வறட்சியின் கோரப்பிடியில் ஒகேனக்கல் வனப்பகுதி: சின்னாற்றில் ஊற்றுப் பள்ளம் தோண்டி தண்ணீர் சேகரிக்கும் மக்கள் - யானைகள் நடமாட்டத்திற்கு இடையே சவாலான வாழ்க்கை

ஒகேனக்கல் அருகே வனப்பகுதியை ஒட்டி வசிக்கும் பொதுமக்கள் குடிநீருக்காக சின்னாற்றில் ஊற்று தோண்டி தண்ணீர் சேகரிக்கின்றனர்.

ஒகேனக்கல் அருகே வனத்திற்குள் 6 குடியிருப்பு களுடன் அமைந்துள்ள ஒட்டப்பட்டி என்ற கிராமத்தில் தற்போது கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் சிலருக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தின் உரிமையாளர்கள் வேறு இடத்தில் வசிக்கின்றனர். அதே நேரம், ஏழைக் குடும்பத்தினர் சிலரை இந்த நிலத்தின் உரிமையாளர்கள் தங்கள் நிலத்தில் குடியமர்த்தி நிலத்தை பராமரித்து வருகின்றனர்.

இவ்வாறு தங்கியுள்ள குடும்பத்தினர் விவசாய நிலத்தில் உள்ள கிணறுகள் மூலம் தங்களுக்கான குடிநீர் மற்றும் வீட்டுத் தேவைக்கான நீரை பெற்று வந்தனர். ஆனால், தற்போதைய வறட்சியில் இந்த கிணறுகள் வற்றி விட்டதால் இந்த குடும்பத்தினருக்கு குடிநீருக்குக் கூட தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் சின்னாறு அமைந்துள்ளது. வறண்டு கிடக்கும் சின்னாற்றில் குறிப்பிட்ட அளவு வரை மணல் பரப்பில் பள்ளம் தோண்டினால் ஊற்று உருவாகிறது. இதைக்கொண்டு இங்கு வசிக்கும் குடும்பத்தினர் தங்களுக்கான தண்ணீரை சேகரித்து வருகின்றனர்.

ஒட்டப்பட்டி பகுதியில் வசிப்பவர்களில் ஒரு தம்பதியான செல்வம்-முனியம்மாள் தாங்கள் வசிக்கும் இடத்தில் இருந்து சுமார் 300 மீட்டர் தூரத்தில் சின்னாற்றில் தண்ணீர் எடுக்க அங்குள்ள மணல் பரப்பில் சுமார் 7 அடி ஆழம் பள்ளம் தோண்டியுள்ளனர். குரங்குகள் உள்ளிட்ட வன விலங்குகள் ஊற்றுக் குழியில் இறங்கி நீரை அசுத்தப்படுத்தி விடாமல் தடுக்க சுற்றிலும் முட்களைக் கொண்டு பாதுகாப்பை ஏற்படுத்தி உள்ளனர்.

இதுகுறித்து முனியம்மாள் கூறியது :

கூத்தப்பாடி ஊராட்சி நிர்வாகம் மூலம் ஒகேனக்கல் பகுதிக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், ஒகேனக்கல்லுக்கு ஒரு கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும். நான், என் கணவர், எங்களின் 3 குழந்தைகள், கால்நடைகள், ஆடுகள் என அனைவருக்கும் தேவையான தண்ணீரை அவ்வளவு தூரம் சென்று எடுத்து வருவது கடினமான வேலை. கணவர் ஆடு மேய்க்க சென்று விடுவார். அதனால் தான் ஆற்றில் பள்ளம் தோண்டி ஊற்று அமைத்து தண்ணீர் சேகரித்து வருகிறோம்.

துணி துவைப்பது, பாத்திரங் களை சுத்தமாக்குவது, குழந்தைகளை குளிக்க வைப்பது ஆகிய பணிகளை ஊற்று அமைந்துள்ள பகுதியிலேயே முடித்து விடுவேன். மீதி தேவைக்கான தண்ணீரை மட்டும் குடங்களில் எடுத்துச் செல்வேன். குடிநீருக்கான தண்ணீரை மட்டும் துணியால் வடித்து பாத்திரங்களில் சேகரித்துக் கொள்வோம்.

குடிநீர் பற்றாக்குறையால் ஆற்றுப் படுகையில் அடிக்கடி யானைகள் நடமாடுவதால் ஆற்றில் தண்ணீர் சேகரிக்கச் செல்வதும் ஆபத்தான பணி தான். இருப்பினும், வேறு வழியின்றி குடும்பத் தேவைக்கான தண்ணீரை சேகரிக்கிறோம். பல்வேறு சவால்களுக்கு இடையே இவ்வாறு எங்களின் வாழ்க்கை நகர்கிறது. இவ்வாறு கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x