Published : 24 Sep 2014 11:31 AM
Last Updated : 24 Sep 2014 11:31 AM

மங்கள்யான் வெற்றி வெகு சிறப்பானது: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு கருணாநிதி பாராட்டு

செவ்வாய்க் கிரக சுற்று வட்டப்பாதையில் மங்கள்யான் விண்கலம் நிலைநிறுத்தப்பட்டதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு திமுக தலைவர் கருணாநிதி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "செவ்வாய்க் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சத்தீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து 5-11-2013 அன்று பிற்பகல் 2.38 மணிக்கு "மங்கள்யான்" விண்கலம், முதன் முறையாக வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டவுடனேயே, இந்திய விஞ்ஞானிகளுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என்னுயை மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்திருந்தேன்.

450 கோடி ரூபாய்ச் செலவில், இந்திய விஞ்ஞானிகளால், உருவாக்கப்பட்ட விண்கலம் ஆகும் அது. செவ்வாய்க் கிரகத்துக்கான இந்த விண்கலத்தைத் திட்டமிட்ட பாதையில் துல்லியமாக நிலைநிறுத்தியதன் மூலம் நமது இந்திய விஞ்ஞானிகள் உலகத்தின் கவனத்தையும், ஆர்வத்தையும் அப்போதே ஈர்த்தனர்.

இந்த விண்கலத்தின் பல்வேறு இயந்திரங்கள் படிப்படியாக இயக்கப்பட்டு, சுற்று வட்டப் பாதையில் மெல்ல மெல்ல ஆனால் உறுதியாக மேலெழச் செய்யப்பட்டது. 2013ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதியன்று, புவி ஈர்ப்பு விசையிலிருந்து விலகி, 66.6 கோடி கிலோ மீட்டர் தொலைவிலே உள்ள செவ்வாய்க் கிரகத்தை நோக்கி மங்கள்யான் தனது பயணத்தைத் தொடங்கியது.

2014 ஜுன் 12ஆம் தேதி, மங்கள்யான் விண்கலம் இரண்டாவது வழித் தடத்திற்கு மாற்றப்பட்டு, தொடர்ந்து மூன்றாவது வழித் தடத்திற்கும் மாற்றம் செய்யப் பட்டது. இன்று (24-9-2014) அதிகாலை 3 மணிக்கு இந்த விண்கலம் செவ்வாய் சுற்றுவட்டப் பாதையை நெருங்கியது. இன்று காலை 8 மணியளவில் செவ்வாய்க் கிரகத்தின் சுற்று வட்டப் பாதையில் மங்கள்யான் இணைக்கப்படும் மாபெரும் விண்வெளி ஆராய்ச்சி வரலாற்று நிகழ்ச்சி நடந்தேறியது.

செவ்வாய்க் கிரகத்தின் சுற்று வட்டப்பாதையில் இந்தியாவின் மங்கள்யான் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதன் மூலம், இத்தகைய அரிய சாதனையைச் செய்த நான்காவது நாடு என்ற பெருமை இந்தியத் திருநாட்டிற்கு கிட்டியுள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா ஆகிய நாடுகள் இந்தச் சாதனையை ஏற்கனவே உருவாக்கியிருக்கின்றன. மேலும், செவ்வாய்க் கிரகத்தின் சுற்று வட்டப் பாதைக்குள் முதல் முயற்சியிலேயே விண்கலத்தை நிலை நிறுத்திய புகழும் பெருமையும் நமது நாட்டிற்குக் கிடைத்துள்ளது.

செவ்வாய்க் கிரகத்தில் நீர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள், அங்குள்ள கனிம வளம் ஆகியவற்றை கூர்ந்தாய்வு செய்வதற்கான கருவிகள் மங்கள்யான் விண்கலத்தில் பொருத்தப்பட்டிருப்பதால், அவை பற்றிய அரிய தகவல்கள் இந்தியாவுக்குக் கிடைத்து, செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆராய்ச்சியை வேகமாக முன்னெடுத்துச் செல்லும் நல்வாய்ப்பு பெருமளவுக்கு விரிவடைந்துள்ளது.

வெகு சிறப்பான இத்தகைய விண்வெளி வெற்றிக்குக் காரணமான இஸ்ரோ தலைவர் கே. ராதாகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் அரும்பணியாற்றியிருக்கும் அனைத்து விஞ்ஞானிகளுக்கும், அவர்களுக்கு தொய்வில்லாத ஆதரவினை அளித்த மத்திய அரசுக்கும், குறிப்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது இதயபூர்வமான பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என கருணாநிதி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x