Published : 07 Feb 2014 12:00 AM
Last Updated : 07 Feb 2014 12:00 AM

உண்மையை வெளிக்கொண்டுவர ரகசிய கேமரா பதிவு தவறல்ல: சென்னையில் நடந்த உலக பத்திரிகை ஆசிரியர்கள் கூட்டத்தில் தகவல்

பொதுநலன் கருதியும் உண்மையை வெளிக்கொண்டுவரவும் காட்சிகள் மற்றும் உரையாடல்களை ஊடகத்தினர் ரகசியமாக பதிவு செய்வது தவறில்லை. நோக்கத்தை பார்க்க வேண்டுமே தவிர வழிமுறைகளை பார்க்கக் கூடாது’ என்று சென்னையில் நடந்த உலக பத்திரிகை ஆசிரியர்கள் பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

உலக பத்திரிகை ஆசிரியர்கள் பேரவை சார்பில் ‘தகவல் தொழில் நுட்ப கண்காணிப்பு யுகத்தில் ஊடகவியல்’ என்ற தலைப்பில் சென்னையில் புதன்கிழமை கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

‘தி இந்து’ முதன்மை ஆசிரியர் என்.ரவி தலைமையில் நடந்த இந்த கலந்துரையாடலில் ‘பிரஜா வாணி’ கன்னட நாளிதழ் செய்தி ஆசிரியர் கே.என்.சாந்தகுமார், ‘தைனிக் பாஸ்கர்’ குஜராத்தி நாளிதழ் தேசிய ஆசிரியர் கல்பேஷ் யானிக், ‘அவுட்லுக்’ ஆங்கில இதழ் முதன்மை ஆசிரி யர் கிருஷ்ண பிரசாத் ஆகியோர் கலந்துகொண்டனர். ‘தி இந்து’ முதன்மை ஆசிரியர் என்.ரவி, தனது தலைமையுரையில் கூறியதாவது:

தற்போது கண்காணிப்பு என்பது, உலகம் முழுவதிலும் உள்ள ஒன்றாக மாறிவிட்டது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி யின் மூலம் இ-மெயில், இணையம் என எந்த தகவலையும் இடைமறித்து தெரிந்துகொள்ள முடியும். நாட்டு நலன், பாதுகாப்பு, குற்றச்செயல்களை தடுப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக இவ்வாறு தகவல்கள் இடைமறிக்கப் படுவதாக கருத்துகள் முன்வைக் கப்படுகின்றன. ஆனால், இந்த விஷயத்தில் ஊடகங்கள் என்று வரும்போது சந்தேகம் எழுப்பப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆகியோரின் தொலைபேசி உரையாடல்கள், அவர்களுக்குத் தெரி யாமல் பதிவு செய்யப்படுகின்றன. அதிகாரத்தில் இருப்பவர்கள் செய்யும் தவறுகளும், குற்றச் செயல்களும் இதுபோன்ற தொலைபேசி உரையாடல் பதிவு மூலம் வெளிச்சத்துக்கு வந்துள் ளன. இந்தத் தகவல்கள் ஊடகங்களுக்கு கசிந்து செய்திகளாக வெளிவருகின்றன.

இதுபோன்ற நேரங்களில், முக்கியப் பிரமுகர்களின் தனிப்பட்ட வாழ்க்கை ரகசியம் குறித்து கேள்வி எழுப்பப்படுவது ஊடகத் துறையினர் சந்திக்கும் மற்றொரு பிரச்சினை. பொது நலனுக்காக என்று சொல்லும்போது அதற்கான வரையறை என்ன என்ற கேள்வியும் எழுகிறது. பொதுமக்களை தவறாக வழிநடத்துவதை பொதுநலன் என்று கூற முடியாது.

இவ்வாறு என்.ரவி பேசினார்.

கலந்துரையாடலில் சாந்த குமார் பேசும்போது, “ஊடக கண்காணிப்பு என்பது இன்று நேற்றல்ல, பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. கண்காணிப்பின் அளவு வேண்டுமானால் மாறியிருக்கலாம். தகவல் கொடுக்கும் நபர்கள் யார் என்பதை வெளியே சொல்லாமல் செய்தியாளர்கள் ரகசியம் காக்க வேண்டியுள்ளது'' என்றார்.

கல்பேஷ் யானிக் பேசுகையில், “உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும் என்பது தான் ஊடகவியலின் முதன்மை நோக்கம். அந்தப் பணியைச் செய் வதை அரசோ, அரசு நிறுவனங்களோ கண்காணித்தால் எப்படிச் சரியாகும்'' என்றார்.

கிருஷ்ணபிரசாத் பேசும்போது, ‘‘அரசு, போலீஸ், ராணுவம் ஆகியவை மற்றவர்களின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணிக்கும்போது, அதே பணியை பொதுநலன் கருதி ஊடகத்தினர் செய்தால் மட்டும் எப்படி தவறாகும்?’’ என்று கேள்வி எழுப்பினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x