

சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு மருத்துவமனையில் கண் புரை அறுவை சிகிச்சை செய்த 16 பேர் கண் பார்வை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது சம்பந்தமாக மருத்துவக் குழு விசாரணைக்கு மாவட்ட சுகாதாரப் பணிகள் அதிகாரி இன்பசேகரன் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் மேட்டூரில் மாவட்ட தலைமை அரசு மருத்துவ மனை உள்ளது. இந்த மருத்துவ மனையில், மேட்டூர், கொளத்தூர், நங்கவல்லி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 14-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை இலவச கண் புரை அறுவை சிகிச்சை முகாம் நடந்தது. இந்த முகாமில் அரசு பெண் டாக்டர் பங்கேற்று நோயாளிகளுக்கு கண் புரை அறுவை சிகிச்சை செய்தார்.
முகாம் நடந்த 14-ம் தேதி 7 பேரும், 15-ம் தேதி 8 பேரும், 16-ம் தேதி 8 பேர் என மொத்தம் 23 பேர், கண் புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டனர். சிகிச்சை முடிந்த நிலையில் பலருக்கும் கண் பார்வை பிரச்சினையால் அவதிக்குள்ளாகி அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனை செய்யச் சென்றனர்.
மேட்டூர் ராஜகணபதி தெருவைச் சேர்ந்த பாக்கியம், ஈரோடு கொமரா யனூரைச் சேர்ந்த லட்சுமி (65), செட்டிமாங்குறிச்சியைச் சேர்ந்த சின்னதம்பி (55), ராஜலிங்கம் (55), கொளத்தூரைச் சேர்ந்த ஒண்டியம் மாள், மேட்டூரைச் சேர்ந்த முத்தம் பாள், அரூரைச் சேர்ந்த பார்வதி, மேட்டூரைச் சேர்ந்த பிலோமினா, மும்தாஸ், அம்மாசி உள்பட 16 பேரும், தனியார் மருத்துவ மனையில் பரிசோதனை செய்த போது, அவர்களுக்கு கண் பார்வை பறிபோனது தெரியவந்தது.
பார்வை இழப்புக்கு உள்ளான வர்கள் தனியார் மருத்துவமனை களில் தொடர் சிகிச்சையில் உள்ளனர். மிகவும் மோசமான நிலையில் உள்ள பலர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அரசு மருத்துவமனையில் அளிக் கப்பட்டசிகிச்சையில் கண் பார்வை பறிபோனதை அறிந்த உறவினர்கள் நேற்று மேட்டூர் அரசு மருத்துவ மனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்துக்கு காரணமான அரசு பெண் டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் போராட்டம் நடத்தினர்.
இந்தச் சம்பவம் பற்றி தகவல் அறிந்த சேலம் மாவட்ட சுகாதார பணிகள் மற்றும் குடும்ப நல இணை இயக்குநர் (பொ) இன்பசேகரன், மேட்டூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். கண் புரை அறுவை சிகிச்சை செய்த மருத்துவரிடம் அவர் விசாரணை செய்தார். பின்னர் செய்தியாளர் களிடம் கூறும்போது, ‘‘இந்த சம்பவம் தொடர்பாக 3 மருத்துவக் குழுவினர் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு, அவர்கள் விசா ரித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட வர்களுக்கு மேல் சிகிச்சை செலவு களை மட்டும் மேட்டூர் அரசு மருத்து வமனை ஏற்கும். இதுதொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த சென்னையில் இருந்து 6 பேர் கொண்ட குழு சேலம் விரைந்து உள்ளனர். இதுகுறித்து அக்குழு வினர் விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்வர்’’ என்றார்.
கண் புரை அறுவை சிகிச்சையினால் பார்வை பாதிக்கப்பட்டு, சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண்கள்.