

மக்கள் குறைதீர்வு முறைகள், சட்டக் கல்வி உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வு செய்ய, நாடாளுமன்ற நிலைக்குழு வரும் 21-ம் தேதி சென்னை வருகிறது.
இது தொடர்பாக மத்திய அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், ''பணியாளர், மக்கள் குறைகள், சட்டம் மற்றும் நீதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவில் 28 எம்.பி.க்கள் இடம்பெற்றுள்ளனர். காங்கிரஸ் உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் இதன் தலைவராக உள்ளார். இக்குழுவினர் வரும் 21-ம் தேதி சென்னை வருகின்றனர். இவர்கள், சென்னை அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்துக்கு சென்று ‘சட்டக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மேம்பாடு’ குறித்து விவாதிக்கின்றனர்.
பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாரதிய நபீகியா வித்யுத் நிகம் (பாவினி), இந்திய அணுமின் நிறுவனம், இந்திய விமான நிலையங்கள் ஆணையம் ஆகியவற்றின் பிரதிநிதிகளை சந்திக்கின்றனர். அப்போது, பொதுமக்கள் குறைதீர்வு முறை, கண்காணிப்புத் துறை மேலாண்மை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அமலாக்கம் குறித்து விவாதிக்கின்றனர்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தேர்தல் அதிகாரிகள் ஆகியோரை சந்தித்து, தேர்தலின்போது அரசியல் கட்சிகளின் தேர்தல் நடத்தை விதிகளின் செயல்பாடு குறித்தும் விவாதிக்கின்றனர். மாநில அரசு, மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் நிர்வாக பயிற்சி நிறுவனம், இந்திய மேலாண்மை நிறுவன பிரதிநிதிகளை சந்திக்கின்றனர். அப்போது அந்தந்த மாநில அரசு நிறுவனங்களில் ஆலோசகர்கள், நிபுணர்கள் நியமனம் குறித்தும் விவாதிக்கின்றனர். சென்னை தவிர, பெங்களூரு, போபாலுக்கும் இக்குழுவினர் பயணம் மேற்கொள்கின்றனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.