

பள்ளிக்கரணையில் உயர் அழுத்த மின்சாரம் தாக்கி நிறைமாத கர்ப்பிணியும், அவரது கணவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை மேடவாக்கம் பத்மாவதி நகர் ஜல்லடி யான்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சவுந்திரராஜன்(27). இவரது மனைவி சுபத்ரா(25). இவர்களுக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. சுபத்ரா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று மாலை சவுந்திரராஜன், சுபத்ரா இருவரும் வீட்டின் மாடிக்கு மல்லிகை பூ பறிக்க சென்றனர்.
அப்போது வீட்டருகே சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியை சுபத்ரா தெரியாமல் பிடித்து விட்டார். அவரை காப்பாற்ற சவுந்திரராஜன் முயற்சி செய்ய அவரையும் மின்சாரம் தாக்கியது. இருவரின் அலறல் சத்தம் கேட்டு சவுந்திரராஜனின் தந்தை செல்வக்குமார் அவர்களை காப்பாற்ற முயற்சி செய்தார். அவரையும் மின்சாரம் தாக்கியது.
இதில் சுபத்ரா, சவுந்திரராஜன் இருவரும் பரிதாபமாக உயிரிழந் தனர். படுகாயம் அடைந்த செல்வக் குமார், அருகே உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட் டுள்ளார். இந்த சம்பவம் குறித்து பள்ளிக்கரணை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேன்மோதி பலி
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் இருந்து நேற்று திருத்தணிக்கு வாழைத்தார் ஏற்றிச் சென்ற சரக்கு வேன் ஒன்று, வாழைத்தார்களை விநியோகித்து விட்டு பட்டாபிராம் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தது. பெரியபாளையம் அருகே உள்ள ஆத்துப்பாக்கம் பகுதியில் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
இதில், வேனில் பயணித்த ஓட்டுநர் உள்ளிட்ட 6 பேரில், கவியரசன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படு காயமடைந்த 5 பேர் திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இதுகுறித்து, பெரிய பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.
மூதாட்டி பலி
கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சின்னஒபுலாபுரத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி(58). இவர் நேற்று தேவாலயத்துக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ஜி.என்.டி. சாலையில் சென்றபோது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற லாரி மோதியதில் சரஸ்வதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கும்மிடிப்பூண்டி- சிப்காட் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.