

சென்னை புத்தகக் காட்சி நிறைவடைய இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், எம்ஜிஆர் பிறந்தநாள் நூற்றாண்டை முன்னிட்டு இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதால், புத்தகக் காட்சிக்கு அதிக அளவில் வாசகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) நடத்தும் 40-வது ஆண்டு சென்னை புத்தகக் காட்சி, கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி வளாகத்தில் கடந்த 6-ம் தேதி தொடங்கியது. இதில் 700 அரங்குகள் உள்ளன. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் 1 கோடிக்கும் அதிகமான புத்தகங்கள் குவிந்திருக்கின்றன.
அலுவலக நாட்களில் புத்தகக் காட்சிக்கு செல்வது சிரமம் என்பதாலும், அதிக நேரம் செலவிட முடியாது என்பதாலும் விடுமுறை நாட்களையே வாசகர்கள் தேடுவர். இந்நிலையில், மறைந்த முதல்வர் எம்ஜிஆர் பிறந்தநாள் நூற்றாண்டை முன்னிட்டு தமிழகத்தில் இன்று (17-ம் தேதி) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தகக் காட்சிக்குச் செல்ல இன்றைய விடுமுறை நாள் கூடுதல் வாய்ப்பு என்று வாசகர்கள் பலரும் உற்சாகத்துடன் தெரிவித்தனர்.
இதுகுறித்து சமூக வலைதளங்களில் பலரும், ‘‘புத்தகக் காட்சியானது புத்தகங்கள் வாங்குவதைத் தாண்டி எழுத்தாளர்களைச் சந்திப்பது, குடும்பத்தோடு சென்று குழந்தைகளுக்கு வாசிப்பின் முக்கியத்துவத்தை அறிமுகப்படுத்துவது என்று பலவகை நோக்கங்களை உள்ளடக்கியது. கூடுதல் விடுமுறை நாள் கிடைத்திருப்பது கூடுதல் சந்தோஷம். காலையிலேயே புத்தகக் காட்சிக்குப் புறப்பட வேண்டும்’’ என்று கருத்து தெரிவித்துள்ளனர். புத்தகக் காட்சி 19-ம் தேதி நிறைவடைவது குறிப்பிடத்தக்கது.
அரங்கு எண் 43-ல் ‘தி இந்து’
சென்னைப் புத்தகக் காட்சியில் ‘தி இந்து’வின் அரங்கு எண் 43 & 44. ‘தி இந்து’ நாளிதழில் வெளியாகி வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘ஆங்கிலம் அறிவோம்’, ‘பெண் எனும் பகடைக்காய்’, ‘தொழில் ரகசியம்’, ‘வீடில்லா புத்தகம்’, ‘வேலையை காதலி’, ‘கடல்’, ‘மெல்லத் தமிழன் இனி’, ‘காற்றில் கலந்த இசை’ போன்ற நூல்களுடன் புதிய புத்தகங்களும் இடம்பெற்றுள்ளன. முன்னாள் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாமின் இறுதி நூலான ‘என் வாழ்வில் திருக்குறள்’, அசோகமித்திரனின் ‘மவுனத்தின் புன்னகை’, கருந்தேள் ராஜேஷின் ‘சினிமா ரசனை’, ஆயிஷா நடராஜனின் ‘என்னைச் செதுக்கிய மாணவர்கள்’ போன்ற புதிய வெளியீடுகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ‘தி இந்து’வின் ஆங்கில நூல்களும் இங்கு கிடைக்கும்.