

சட்டப்பேரவை வளாகத்தில் எப் போதும் இல்லாத அளவுக்கு காவல் துறையினர் கெடுபிடி செய்வது ஏன் என எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து நடைபெற்ற விவாதம்:
துரைமுருகன்:
சட்டப்பேரவை வளாகத்தில் இன்று எப்போதும் இல்லாத அளவுக்கு அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். எங்களது வாகனங்களைக்கூட சோதனை செய்த பிறகே அனுமதிக் கின்றனர். ஏன் இந்த கெடுபிடி?
பேரவைத் தலைவர் பி.தனபால்:
பேரவைத் தலைவரான எனக்கும், உங்களுக்கும் பாதுகாப்பு வழங்கு வதற்காகவே காவல் துறையினர் இந்த நடவடிக்கைகளை எடுத் துள்ளனர்.
நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:
பாதுகாப்பு காரணங்களுக்காகவே காவல் துறையினர் சில நடவடிக்கை களை எடுத்துள்ளனர். விமான நிலை யத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் சொல்கிறபடியெல்லாம் கேட்டு சோதனை நடத்த அனுமதிக்கிறோம். அதுபோல இங்கும் சோதனை நடத்தப்படுகிறது.
துரைமுருகன்:
பாதுகாப்புக்காக சோதனை என்பதை ஏற்கிறேன். ஆனால், எப்போதும் இல்லாத அளவுக்கு இன்று மட்டும் ஏன் இந்த சோதனை? வெளியில் என்ன நடக்கிறது என்பது பேரவைக்கு தெரிய வேண்டும் என்பதற்காகவே இப்பிரச்சினையை எழுப்புகிறேன்.
பேரவைத் தலைவர்:
அவ்வப் போது ஏற்படும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்கின்றனர். அதற்கு நாம் ஒத்துழைக்க வேண் டும். நம் அனைவரின் பாதுகாப்புக் காகவே இந்த ஏற்பாடு.