

தொடங்கிய திட்டத்தை பாதியில் நிறுத்த முடியாது என்பதால் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் முடிக்கப்பட்டதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் மா.சுப்பிரமணியன், ‘‘முதல்வர் ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ‘சென்னை பழமையான மாநகரம் என் பதால் மெட்ரோ ரயில் திட்டம் சரிவராது. இதனால் பெரும் பாதிப்புகள் ஏற்படும்’ என சட்டப்பேரவையில் தெரிவித்தார். ஆனால், இப்போது மெட்ரோ ரயில் திட்டத்தை தான்தான் கொண்டு வந்ததாக கூறுகிறார்’’ என தெரிவித்தார்.
அவருக்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, ‘‘மெட்ரோ ரயில் திட்டம் பற்றி ஏற்கெனவே சொன்ன கருத்துகளை நான் மறுக்கவில்லை. இதெல்லாம் நான் பேசிய கருத்துகள்தான். இது உண்மை தான். ஆனாலும் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டுவிட்டது. பணிகளை முடித் தாக வேண்டிய கட்டாயம். அதனால் பணிகள் முடிக்கப்பட்டன. தொடங்கப்பட்டு நடை பெற்று வரும் ஒரு திட்டத்தை பாதியில் நிறுத்த முடியாது. இதற்கு மத்திய அரசு செய்த உதவிக்காக நன்றி தெரி வித்தேன். நான் பேசியதை மறுக்கவில்லையே’’ என்றார்.