Published : 06 Jul 2016 10:28 AM
Last Updated : 06 Jul 2016 10:28 AM

காரைக்கால் அருகே பழங்கால நகைகள் கண்டெடுப்பு

காரைக்கால் அருகே அகலங்கண் கிராமத்தில் கழிவுநீர் தொட்டி கட்ட தோண்டிய பள்ளத்தில் இருந்து பழங்கால உலோகச் சிலைகள், நகைகள் கண்டெடுக்கப்பட்டன.

காரைக்கால் திருநள்ளாறுக்கு அருகேயுள்ள அகலங்கண் கிராமம் மேலத் தெருவில் வசிக்கும் வரதராஜன் மகன் பன்னீர்செல்வம் (55), தனது வீட்டில் கழிவுநீர்த் தொட்டி கட்டுவதற்காக கொல்லைப்புறத்தில் நேற்று பள்ளம் தோண்டினார்.

சுமார் 6 அடி ஆழம் தோண்டிய போது சிறிய குடம் போன்ற உலோ கம் தட்டுப்பட்டது. மேலும் தோண்டிப் பார்த்தபோது அதில், உலோகத்தாலான சிறிய அம்மன் சிலைகள் மற்றும் ஆபரணங்கள் இருந்தது தெரியவந்தது.

அதனையடுத்து திருநள்ளாறு வட்டாட்சியர் அலுவலகம், மற்றும் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த வட்டாட்சியர் முத்து தலைமையிலான வருவாய்த்துறை யினர் சிலை மற்றும் ஆபரணங்களைக் கைப்பற்றினர்.

இனி அந்த இடத்தில் அனுமதியின்றி பள்ளம் தோண்டக்கூடாது என்று உத்தரவிட்ட வருவாய்த் துறையினர், கைப்பற்றிய பொருட்களை சார் ஆட்சியர் கேசவனிடம் ஒப்படைத் தனர்.

இந்தச் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பள்ளம் தோண்டும்போது எவ்வித பொருட்கள் கிடைத்தாலும் வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்து அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட வருவாய்த் துறையினர், கைப்பற்றப்பட்ட பொருட்கள் எந்த உலோகத்தால் ஆனது மற்றும் எந்த காலத்தைச் சேர்ந்தது என்பதெல்லாம் தொல்பொருள் துறையினரின் ஆய்வுக்கு பின்னரே தெரியவரும் என்றனர்.

காரைக்கால் அகலங்கண் கிராமத்தில் பள்ளம் தோண்டியபோது கண்டெடுக்கப்பட்ட சிறிய சிலைகள் மற்றும் ஆபரணங்கள். அடுத்தபடம்: அகலங்கண் கிராமத்தில் கைப்பற்றப்பட்ட சிலைகள், ஆபரணங்களை சார் ஆட்சியரிடம் ஒப்படைக்கும் வருவாய்த் துறையினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x