விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு

விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு
Updated on
1 min read

மார்ச் 3 அன்று மாவட்ட, வட்ட தலைநகர்களில் நடைபெறும் விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்று ஆதரிக்கும் என அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கடந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழையும், வடகிழக்கு பருவ மழையும் பொய்த்துப் போய்விட்டது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி கர்நாடகம், தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய தண்ணீரை வழங்க மறுத்துவிட்டது. இதனால் தமிழ்நாட்டின் நீர்தேக்கங்கள் அனைத்தும் தரைமட்ட நிலைக்கு தாழ்ந்து, தமிழ்நாடு முழுவதும் வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறது. குடிநீர் பஞ்சம் உருவாகியுள்ளது.

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் தொடர் போராட்டத்தின் நிர்பந்தம் காரணமாக தமிழ்நாடு அரசு வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து, நிலவரியை ரத்து செய்துள்ளது. 200 க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாகுபடி செய்த பயிர்கள் கருகி அழிந்ததால் தற்கொலை செய்தும், அதிர்ச்சியுற்றும் மரணமடைந்துள்ளனர். ஆனால் அரசு, உயிரிழந்த விவசாயிகள் குடும்பங்களுக்கு மட்டும் நிவாரணநிதி அறிவித்து விட்டு மற்றவர்களை கைவிட்டுள்ளது.

விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிவாரண நிதி மிகக் குறைவானது மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை இதுவரை ஏற்கப்படவில்லை. விவசாயத் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு நிவாரணநிதி அறிவிக்காதது அடித்தட்டு உழைக்கும் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும்.

இப்போது அறிவிக்கப்பட்டுள்ள நிவாரண நிதியும் 5 ஏக்கருக்கு மட்டுமே வழங்கப்படும் என நிபந்தனை போட்டு வழங்கப்படுவதால் பெரும்பாலான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஊழல் முறைகேட்டுக்கு வழிவகுத்துள்ளது. சாகுபடி செய்த பரப்பளவுக்கு தக்கபடி நஷ்டமும், இழப்பும் கூடியிருக்கும் போது, அவர்களுக்கு நிவாரணநிதி மறுப்பது நேர்மையற்ற செயலாகும்.

தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி நிலையை சமாளிக்க ரூ. 39,565 கோடி நிவாரணநிதி தேவை என மத்திய அரசிடம் கேட்கப்பட்டுள்ளது. முன்னர் வர்தா புயல் பாதிப்பால் ஏற்பட்ட சேதாரத்தை ஈடுகட்ட ரூ.22,573 கோடி தேவை என கோரப்பட்டது. இதன்மீது மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தார்கள். ஆனால் இதுவரை சல்லிக்காசு கூட மாநில அரசுக்கு நிதி கொடுத்து உதவவில்லை.

கட்சி அரசியல் ஆதாயத்துக்காக மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டின் நலனுக்கு துரோகமிழைத்து வருகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் ஆதரவை அணிதிரட்டி மத்திய, மாநில அரசுகளுக்கு அழுத்தம் தந்து, வறட்சி நிவாரண உதவிகள் பெறுவதற்காக மார்ச் 3 அன்று மாவட்ட, வட்ட தலைநகர்களில் நடைபெறும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்று ஆதரிக்கும்'' என முத்தரசன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in