

மெரினா கடற்கரையில் 27 பவுன் நகைகள், செல்போன் மற்றும் பணத்துடன் ஒரு பெண் தவறவிட்டுச் சென்ற நகைப் பையை டீக்கடை நடத்தும் பெண் பத்திரமாக போலீஸில் ஒப்படைத்தார். அவரை காவல் ஆணையர் நேரில் அழைத்து பரிசளித்துப் பாராட்டினார்.
ராமேஸ்வரத்தை சேர்ந்தவர் மைமூன் ராணி (40). இவர் சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள தனது உறவினரான அன்வர் கானின் வீட்டுக்கு வந்திருந்தார். உறவினர்களுடன் அவர் கடந்த 17-ம் தேதி இரவு மெரினா கடற்கரைக்கு வந்தார். அனைவரும் இரவு 10 மணிக்கு வீடு திரும்பினர். தனது நகைப் பையை கடற்கரையிலேயே தவறவிட்டு வந்தது மைமூன் ராணிக்கு அப்போதுதான் தெரிய வந்தது. அந்த பையில் 27 பவுன் நகைகள், ரூ.7,750 பணம், செல்போன் ஆகியவை இருந்தன.
இதுகுறித்து அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் மைமூன் ராணி புகார் கொடுத்தார். உடனடி யாக, நகைப் பையில் இருக்கும் அவரது செல்போனை போலீஸார் தொடர்பு கொண்டனர். ஆனால், போன் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், மறுநாள் (18-ம் தேதி) காலையில் திருவல்லிகேணி லாக் நகரை சேர்ந்த அமுதா என்பவர் அண்ணா சதுக்கம் காவல் நிலையத்துக்கு வந்து, மைமூன் ராணியின் நகைப் பையை ஒப்படைத்தார்.
அவர் மெரினா கடற்கரையில் டீக்கடை வைத்திருப்பவர். இரவில் வேலையை முடித்து விட்டு சென்றபோது, கீழே ஒரு பை கிடப்பதைப் பார்த்துள்ளார். அதில் பணம், நகைகள் இருப்பதை அறிந்த அவர், அதை அப்படியே காவல் நிலையத்தில் கொண்டுவந்து ஒப்படைத்துள்ளார். பணம், நகைக்கு ஆசைப்படாமல் அவர் நேர்மையாக நடந்துகொண்டதை போலீஸார் பாராட்டினர்.
இதை அறிந்த சென்னை பெருநகர காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரன் நேற்று காலை அமுதாவை தனது அலுவலகத்துக்கு நேரில் அழைத்து, பரிசுத் தொகை வழங்கி பாராட்டினார். மைமூன் ராணியிடம் நகைப் பையை காவல் இணை ஆணையர் மனோகரன் நேரில் வழங்கினார்.