

விருகம்பாக்கம், வளசரவாக்கம் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பிளஸ் 1 மாணவரை பிடித்து போலீஸார் எச்சரித்து அனுப்பினர்.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள செயின்ட் ஜான்ஸ் பள்ளி, வளசரவாக்கத்தில் உள்ள வெங்கடேஸ்வரா பள்ளி ஆகியவற்றில் வெடிகுண்டு வைத்திருப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு திங்கள் கிழமை தொலைபேசியில் ஒருவர் கூறினார். இரு பள்ளிகளிலும் போலீஸார் சோதனை நடத்தியதில் எதுவும் சிக்கவில்லை.
மர்ம நபர் பேசிய செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில், அது ஜெ.ஜெ.நகர் கலைவாணர் காலனியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு சொந்தமானது என்று தெரிந்தது. ஆனால், அவர் 3 மாதங்களுக்கு முன்பே தனது செல்போன் தொலைந்துவிட்டது என்று கூறினார்.
அந்த செல்போனில் இருந்து பேசப்பட்ட மற்ற எண்களுக்கு போலீஸார் பேசி வெடிகுண்டு மிரட்டல்விடுத்த நபரை கண்டுபிடித்தனர். அவர் செயின்ட் ஜான்ஸ் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் எம்.ஜி.ஆர். நகர் சங்கரலிங்கம் தெருவை சேர்ந்த ஒரு மாணவர் என தெரியவந்தது. விசாரணையில் அவர்தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார் என்பது உறுதி செய்யப்பட்டது. கீழே கிடந்த செல்போனை எடுத்து பெற்றோருக்கு தெரியாமல் தொடர்ந்து பயன்படுத்தி இருக்கிறார் அந்த மாணவர்.
இன்று பள்ளிக்கூடம் செல்ல பிடிக்காமல் விளையாட்டாக இப்படி செய்ததாக அந்த மாணவர் தெரிவித்தார்.
அந்த மாணவரையும், அவரது பெற்றோரையும் போலீஸார் கடுமையாக எச்சரித்தனர். அந்த மாணவரிடம் இனிமேல் இதுபோன்று செய்ய மாட்டேன் என்று எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பினர்.
புகைப்படக்காரர் தாக்கப்பட்ட சம்பவம்: உதவி ஆய்வாளர் இடமாற்றம்
புகைப்படக்காரர் தாக்கப்பட்ட சம்பவத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
சென்னை விருகம்பாக்கம் வேம்புலி அம்மன் கோயில் அருகே உள்ள வாணி வித்யாலயா பள்ளியில் திங்கள்கிழமை காலையில் வெடிகுண்டு புரளி கிளம்பியதை தொடர்ந்து மாணவர்கள் அவசர அவசரமாக வெளியேறினர். இந்தக் காட்சிகளை புகைப்படம் எடுக்க சென்ற 'தி இந்து'(தமிழ்) புகைப்படக்காரர் பிரபு பள்ளி காவலாளிகளால் தாக்கப்பட்டார். தாக்குதல் சம்பவம் நடந்தபோது அருகே நின்று கொண்டிருந்த கே.கே.நகர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரையை கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றம் செய்து துணை ஆணையர் பகலவன் உத்தரவிட்டார்.