Published : 31 Jan 2014 12:00 AM
Last Updated : 31 Jan 2014 12:00 AM

டாக்டர் சுப்பையாவை கொல்ல ரூ.6 கோடி பேரம்- வக்கீல்கள், அரசு டாக்டர் சேர்ந்து திட்டம் தீட்டி கூலிப்படை வைத்து கொன்றது அம்பலம்

சென்னை டாக்டர் சுப்பையா கொலையில் கூலிப்படையினராக செயல்பட்ட 3 குற்றவாளிகள், கொலைக்கு திட்டம் தீட்டிக்கொடுத்த டாக்டர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.6 கோடி கொடுப்பதாக நடந்த பேரத்தின் அடிப்படையில் இக்கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது. எப்படி கொலை நடந்தது என்று கொலையாளிகள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

27 இடங்களில் சரமாரி வெட்டு

சென்னை துரைப்பாக்கம் குமரன்குடில் பகுதியை சேர்ந்தவர் சுப்பையா (58). சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் நரம்பியல் மருத்துவராக பணிபுரிந்த இவர், சில மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றார். பின்னர் அபிராமபுரத்தில் உள்ள பில்ரோத் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார். கடந்த செப்டம்பர் 14-ம் தேதி மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குச் செல்வதற்காக காரை நோக்கிச் சென்றார். அப்போது, காருக்கு அருகில் மறைந்திருந்த 3 பேர் அவரை சரமாரியாக வெட்டினர். பலத்த வெட்டுக் காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் விழுந்தார். சத்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் ஓடி வருவதற்குள், கொலையாளிகள் தப்பினர். 27 இடங்களில் வெட்டுப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிய டாக்டர் சுப்பையா உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அமைந்தகரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி டாக்டர் சுப்பையா செப்டம்பர் 22-ம் தேதி நள்ளிரவு இறந்தார். சுப்பையாவுக்கு ஆனந்தி என்ற மனைவியும், சுவேதா, ஷிவானி என்ற மகள்களும் உள்ளனர். இவர்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

டாக்டர் சுப்பையா இறந்ததையடுத்து, கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டது. போலீஸார் பல கோணங்களிலும் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில் அடுத்தடுத்து பரபரப்புத் தகவல்கள் வெளியாகத் தொடங்கின.

ரூ.12 கோடி நிலம்தான் காரணம்

கன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்புதான் டாக்டர் சுப்பையாவின் சொந்த ஊர். குமரி அருகே அஞ்சுகிராமத்தில் உள்ள ஒரு நிலம் தொடர்பாக டாக்டருக்கும் அதே ஊரைச் சேர்ந்த ஆசிரியர் பொன்னுசாமி குடும்பத்துக்கும்

1958-ம் ஆண்டு முதல் தகராறு இருந்து வந்தது. நிலம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் டாக்டருக்கு சாதகமாக சில மாதங்களுக்கு முன்பு தீர்ப்பு வந்திருக்கிறது. இந்த ஆத்திரத்தில் பொன்னுசாமி தரப்பினர் திட்டம் போட்டு சுப்பையாவை கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகம் இருப்பதாக சுப்பையாவின் உறவினர் மோகன் போலீஸில் புகார் அளித்திருந்தார். பொன்னுசாமி மற்றும் உறவினர்கள் அனைவரும் தலைமறைவாயினர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடத் தொடங்கினர்.

சரணடைந்தவர்கள் கைது

இதற்கிடையில், மருத்துவமனைக்கு எதிர் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் கொலை சம்பவத்தின்போது பதிவான வீடியோ காட்சிகளும் கிடைத்தன. அதில் பதிவான ஒரு உருவம் பொன்னுசாமி மகனான வக்கீல் பாசில் போலவே இருந்ததால், அவரே கொலையில் நேரடியாக ஈடுபட்டதாகவும் சந்தேகம் எழுந்தது. உயர் நீதிமன்ற வளாகத்தில் அவரை போலீஸார் பிடிக்க முயன்றபோது போலீஸாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் மோதல் உருவாகும் சூழலும் ஏற்பட்டது. பெங்களூரில் தலைமறைவாக இருந்த பாசிலும் அவரது சகோதரர் போரிஸும் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் செப்டம்பர் 25-ம் தேதி சரணடைந்தனர். கோயம்புத்தூரில் தலைமறைவாக இருந்த ஆசிரியர் பொன்னுசாமி, மனைவி மேரி புஷ்பா ஆகியோர் கோவை பந்தயசாலை போலீஸ் நிலையத்தில் செப்டம்பர் 28-ம் தேதி சரணடைந்தனர். வீடியோ ஆதாரம் மூலமாகவும் போலீஸாருக்கு துப்பு எதுவும் கிடைக்கவில்லை. கைதானவர்களை காவலில் எடுத்து விசாரித்ததிலும் முக்கிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

ஜாமீனில் வந்தனர்

இதற்கிடையில், சென்னை ராஜா அண்ணாமலைபுரம் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனையுடன் பொன்னுசாமி உள்பட 4 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். ஸ்டேஷனில் கையெழுத்து போடுவதற்காக ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் அவர்கள் 4 பேரும் தங்கியிருந்தனர். அவர்களது நடவடிக்கைகளை போலீஸார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

டாக்டர் சுற்றிவளைப்பு

பாசிலை சந்திப்பதற்காக அவரது நண்பர் டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார் என்பவர் அந்த வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். புதன்கிழமை மாலை தன்னுடன் 3 பேரை அழைத்துக்கொண்டு அந்த வீட்டுக்கு வந்தார் ஜேம்ஸ். சந்தேகம் வலுத்ததால் போலீசார் அங்கு விரைந்தனர். டாக்டர் ஜேம்ஸ் உள்பட 3 பேரையும் சுற்றி வளைத்து விசாரித்தனர். எதற்காக இவர்களைப் பார்க்க வந்தீர்கள் என்று கேட்க, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக மாறிமாறிக் கூறினர். அவர்கள்தான் கொலையாளிகள் என்பதும் ஊர்ஜிதமானது.

எதற்காக கொலை நடந்தது, யார் திட்டம் தீட்டியது, கொலைத் திட்டத்தை எப்படி நிறைவேற்றினார்கள் என்று அவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

ரூ.6 கோடி பேரம்

டாக்டர் சுப்பையாவுடனான நிலப் பிரச்சினை குறித்து தனது உறவினர் வில்லியம்ஸிடம் கூறியுள்ளார் பொன்னுசாமியின் மகன் பாசில். இதுபற்றி வில்லியம்ஸின் நண்பரான டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமாரிடமும் பேசியுள்ளனர். அவர் நெல்லை இஎஸ்ஐ மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிபவர். பைனான்ஸ் தொழிலும் செய்கிறார். சுப்பையா பிரச்சினையை முடித்துக் கொடுத்தால் தனக்கு எவ்வளவு கிடைக்கும் என்று ஜேம்ஸ் கேட்டுள்ளார். பிரச்சினைக்குரிய நிலத்தின் மதிப்பு ரூ.12 கோடி. அதில் பாதி ரூ.6 கோடியை தருவதாக பாசில் உறுதிகூற, டாக்டர் சுப்பையாவை கொலை செய்யும் திட்டத்தை தீட்டினார் டாக்டர் ஜேம்ஸ். தன்னிடம் வேலை பார்க்கும் முருகன், செல்வபிரகாஷ், ஐயப்பன் ஆகியோரையே கொலைக்கு பயன்படுத்தியிருக்கிறார் ஜேம்ஸ். அவர்கள் 3 பேரும் கூலிப்படையாக செயல்பட்டு டாக்டர் சுப்பையாவை வெட்டியுள்ளனர்.

இதையடுத்து, அவர்கள் 3 பேருக்கும் பாசிலிடம் இருந்து ரூ.50 லட்சம் வாங்கித் தருவதாக டாக்டர் ஜேம்ஸ் கூறியுள்ளார். ஆனால், சொன்னபடி தரவில்லை. பணத்தைக் கேட்டு 3 பேரும் ஜேம்ஸுக்கு நெருக்கடி கொடுத்தனர். பணத்தைக் கேட்டு வாங்குவதற்காக அவர்கள் 3 பேரையும் அழைத்துக் கொண்டு பாசிலை சந்திக்க ராஜா அண்ணாமலைபுரம் வீட்டுக்கு வந்தபோது சிக்கிவிட்டனர்.

அவர்களது வாக்குமூலத்தில் இத்தகவல்கள் தெரியவந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் வழக்கறிஞர் வில்லியம்ஸை கைது செய்ய காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x