

தூத்துக்குடி அருகே சிறை பிடிக்கப்பட்ட அமெரிக்க கப்பலில் கைது செய்யப்பட்டு, பாளையங் கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டவரை, அந்நாட்டு தூதரக அதிகாரி செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.
தூத்துக்குடி அருகே இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவை சேர்ந்த அட்வன்போர்ட் என்ற தனியார் மெரைன் பாதுகாப்பு நிறுவனத்துக்கு சொந்தமான சீமேன் கார்டு ஓகியோ என்ற கப்பலை இந்திய கடலோரக் காவல் படையினர் கடந்த 11-ம் தேதி இரவு மடக்கி பிடித்தனர்.
கடலோரக் காவல் படையினர் கொடுத்த புகாரின் பேரில், கப்பலின் கேப்டன் டூட்னிக் வால்ஸின் உள்ளிட்ட 35 பேர் மீதும், தருவை குளம் கடலோர போலீஸார் கடந்த 13-ம் தேதி வழக்கு பதிந்தனர். இந்த வழக்கு கடந்த 19-ம் தேதி கியூ பிரிவுக்கு மாற்றப்பட்டது. கியூ பிரிவு போலீஸாரின் விசாரணைக்குப்பின் கப்பலில் இருந்த 35 அதிநவீன துப்பாக்கிகளையும் 5,680 தோட்டாக்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
கப்பலில் இருந்த 35 பேரும் அடுத்தடுத்த நாட்களில் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் உக்ரைன் நாட்டை சேர்ந்த டட்னிக் வாலன்டைன் (கப்பல் கேப்டன்), சிடரென்கோ வாலேரி (தலைமை பொறியாளர்), லெஜென்சிமெனோவா (பாதுகாப்பு வீரர்) ஆகியோரை, புதுதில்லியி லிருந்து உக்ரைன் தூதரக அதிகாரி ஒலிட்ஸர் மொலோன்ஸ்கோய் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். இரண்டு மணி நேரம் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.