கல்விக் கடன் தள்ளுபடி, நீட் தேர்வு நிலைப்பாடு ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டும்: ராமதாஸ்

கல்விக் கடன் தள்ளுபடி, நீட் தேர்வு நிலைப்பாடு ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டும்: ராமதாஸ்
Updated on
1 min read

மாணவர்களின் கல்விக் கடனை தள்ளுபடி செய்வது, நீட் தேர்வு குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு போன்றவை ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக சட்டப்பேரவையின் நடப்பாண்டிற்கான முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் ஜனவரி 23-ம் தேதி (இன்று) தொடங்குகிறது. கடந்த ஆண்டு ஆளுநர் உரையும், நிதிநிலை அறிக்கையும் ஏமாற்றம் அளித்த நிலையில், நடப்பாண்டின் ஆளுநர் உரையிலாவது பயனுள்ள அறிவிப்புகள் இடம்பெற வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

லோக் அயுக்தா அமைப்பதற்கான சட்ட முன்வடிவை தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துதல் மற்றும் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை செயல்படுத்துதல் வேண்டும். தமிழகத்தின் இன்றைய பெரிய பிரச்சினை விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தான். தமிழக அரசு அண்மையில் அறிவித்த நிவாரணத் திட்டம் விவசாயிகள் தற்கொலையை தடுக்காது. விவசாயிகளுக்கு நிவாரணத் திட்டம் வேண்டும்.

மாணவர்களின் கல்விக்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், அடுத்தக்கட்டமாக எவ்வளவு கடைகள் மூடப்படும். முழு மதுவிலக்கு எந்த தேதி முதல் நடைமுறைக்கு வரும். மதுக்கடைகளில் பணியாற்றும் 25 ஆயிரம் பேருக்கு மாற்று வேலை வழங்குதல் குறித்து அறிவிக்கப்பட வேண்டும்.

பள்ளிக்கல்வித் துறையில் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையிலேயே பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றி வரும் 16,549 தொழிலாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும். தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை எந்த நகரத்தில் அமைப்பது, மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு விஷயத்தில் தமிழகத்தின் நிலைப்பாடு என்பது குறித்தும் ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in