

விருதுநகர் மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் வனவிலங்குகள் கனக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது.
விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் தொடங்கி சாப்டூர் வரையுள்ள சாம்பல் நிற அணில்கள் வன உயிரினச் சரணாலயப் பகுதி, பல அரிய வகை தாவரங்கள், விலங்குகளின் வாழிடமாக உள்ளது. புலி, கரடி, யானை, சிங்கவால் குரங்கு, வரையாடு, காட்டெருமை, காட்டுப் பன்றி மற்றும் சாம்பல் நிற அணில் போன்ற 32 வகையான பாலூட்டிகளும், கிரேட் இந்தியன் ஹார்ன் பில் உள்ளிட்ட 247 பறவையினங்களும் இங்கிருக்கின்றன.
இங்கு வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணி, ஆண்டுதோறும் 3 நாட்களுக்கு நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது. முன்னதாக வனத்துறை அலுவலர்கள், வனக் காப்பாளர்கள், தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கணக்கெடுப்பை மேற்கொள்ளும் முறை குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
சாஸ்தாகோயில் வனப் பகுதியில் நீர் அருந்தும் யானைகள் (கோப்பு படம்).
ராஜபாளையம் பகுதி முதல் மதுரை மாவட்டம் சாப்டூர் வரை மேற்குத் தொடர்ச்சி மலை வனப் பகுதியில் அய்யனார்கோயில், சாஸ்தா கோயில், தேவியாறு, கோட்டைமலை, பிளாவடியார் உள்ளிட்ட 44 பீட்களில் கணக் கெடுப்பு நடக்கிறது. இதில் 44 குழுக்கள் ஈடுபட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 3 முதல் 4 நபர்கள் வரை இடம்பெற் றுள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட வன உயிரின பாதுகாப்பு அலுவலர் அசோக்குமார் கூறுகையில், “கணக்கெடுக்கும் பணியில் வனத்துறையினரோடு, தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் ஊட்டியில் உள்ள வனவர் பயிற்சி மைய மாணவ, மாணவிகள் 14 பேர் ஈடுபட்டுள்ளனர்.
இக்குழுவினர் வனப் பகுதிக்குள் தொடர்ந்து 3 நாள்கள் சென்று வன விலங்குகள் குறித்து கணக்கெடுப்பு செய்வர். வன விலங்குகளை நேரடியாக பார்த்தும், நீர்நிலைகளை ஒட்டிய பகுதிகளில் காணப்படும் விலங்குகளின் காலடித் தடங்கள், எச்சம் ஆகியவற்றைக் கொண்டும் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது” என்றார்.