மெட்ரோ நிலையங்களை இணைக்க சிறிய பேருந்து: போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல்

மெட்ரோ நிலையங்களை இணைக்க சிறிய பேருந்து: போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல்
Updated on
1 min read

மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் புதிய வழித்தடங்களில் சிறிய பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சின்னமலை விமான நிலையம் இடையே கடந்த 21-ம் தேதி மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. மேற்கண்ட வழித்தடத்தில் இருக்கும் விமான நிலையம், மீனம்பாக்கம், நங்கநல்லூர் ரோடு, ஆலந்தூர், கிண்டி, சின்னமலை ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து கணிசமான மக்கள் பயணம் செய்ய தொடங்கிவிட்டனர். ஆனால், நங்கநல்லூர் சாலை போன்ற மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து சுமார் 300 மீட்டர் தூரம் நடந்து சென்று பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டியுள்ளது.

எனவே, மெட்ரோ ரயில் நிலையங்களுடன் பேருந்து நிலையங்களை இணைக்கும் வகையில் பேருந்துகளை இயக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘சென்னையில் மேலும், 100 சிறிய பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கான புதிய வழித்தடங்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கெனவே, 50 சதவீத வழித்தடங்களை தேர்வு செய்துள்ளோம். மெட்ரோ ரயில் நிலையங்கள், குடியிருப்பு பகுதிகளில் இருந்து முக்கிய பேருந்து நிலையங்களை இணைக்கும் வகையில் இந்த வழித்தடங்கள் இடம் பெற்றுள்ளன. எனவே, ஒட்டுமொத்தமாக வழித்தடங்களை தேர்வு செய்தவுடன் சிறிய பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தேவையான இடங்களில் பேருந்து நிறுத்தங்களை செய்து தர வேண்டுமென சென்னை மாநகராட்சியிடமும் வலியுறுத்தப்படும்’’ என்றனர்.

சென்னையில் மேலும், 100 சிறிய பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கான புதிய வழித்தடங்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கெனவே, 50 சதவீத வழித்தடங்களை தேர்வு செய்துள்ளோம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in