

திருப்பூர் பழைய நிலையம் அருகே துணை மேயர் குணசேகரன் தலைமையில் சாலை மறியல் நடந்தது. சுப்பிரமணியன் சுவாமி, கருணாநிதி உருவபொம்மைகள் எரிக்கப்பட்டன. அவிநாசி அருகே அரசு டவுன்பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது. திருப்பூரில் இரட்டை இலை பூபதி என்ற தொண்டர் தன் சுண்டுவிரலை வெட்டிக் கொண்டார். நகரின் பல இடங்களிலும் சாலை மறியல் நடந்தது
கோவையில் பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் நடந்தது. அவினாசி சாலையில் மறியலின்போது கருணாநிதி உருவ பொம்மை, படங்கள் எரிக்கப்பட்டன. ராஜன் என்ற தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அதிமுகவினர் ரயில் மறியலில் ஈடுபட்டனர். தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.
பொள்ளாச்சி பகுதியிலும் மறியல், ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. பேருந்துகள் நிறுத்தப் பட்டதால் மலைப் பிரதேச பகுதிகளுக்குச் செல்லும் மக்கள் இன்னலுக்குள்ளாயினர்.
ஊட்டியில் காப்பி ஹவுஸ் (மார்க்கெட் பகுதி) நகராட்சித் தலைவர் சத்தியபாமா தலைமையில் சாலை மறியல் நடந்தது. குன்னூர், கூடலூர், கோத்தகிரி பேருந்து நிலையங்களிலும் தொண்டர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
உடுமலை மத்திய பஸ் நிலையத்திலிருந்து கொல்லம்பட்டறை வரை சுமார் 2 கி.மீ தூரம் தொண்டர்கள் ஊர்வலமாக வந்து மறியலில் ஈடுபட்டனர். பேருந்துகள் நிறுத்தப்பட்டன, கடைகள் அடைக்கப்பட்டன.