Published : 15 Feb 2017 08:21 AM
Last Updated : 15 Feb 2017 08:21 AM

சசிகலா - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மோதலை தடுக்க அதிமுக அலுவலகங்களுக்கு பாதுகாப்பு

தமிழகம் முழுவதும் அதிமுக மாவட்ட, நகர கட்சி அலுவலகங்கள் முன் நேற்று மதியம் முதல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வம் அணியினர், சசிகலா ஆதரவு எம்எல்ஏக்களை இழுக்க முயற்சித்து வருகின்றனர். பெரும்பான்மை கிடைக்காவிட்டால் மீண்டும் தேர்தல் வர வாய்ப்பு உள்ளதால் ஆட்சியை கைப்பற்று வதற்கான போட்டியில் இந்த இரு கோஷ்டியினரும் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே நேற்று காலை சசிகலாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தமிழகம் முழுவதும் கட்சி அலுவலகங்களைக் கைப்பற்றும் வாய்ப்பு இருப்பதாகவும், அதனால், சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றும் உளவுத்துறை போலீஸார் எச்சரித்தனர்.

இதைத் தொடர்ந்து நேற்று மதியம் முதல் தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக கட்சி அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் மாநகர், புறநகர், ஒன்றிய, நகர கட்சி அலுவ லகங்களை ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுவதால் நேற்று மதியம் முதல் இந்த அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இனிப்பு வழங்கியதால் சர்ச்சை

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். அவர் இறந்ததால் இந்த தீர்ப்பில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். ஆனாலும், இந்த வழக்கில் ஜெயலலிதாவும் சம்பந்தப்பட்டிருந்த நிலையில் தீர்ப்பை வரவேற்று ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடியது ஜெயலலிதா விசுவாசிகளிடையே சர்ச்சையையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கூறும்போது, “நாங்கள் சசிகலாவுக்கு கிடைத்த தண்டனையை வரவேற்கிறோம்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x