அரசியல் ரீதியாக விமர்சித்தால் பொது இடத்தில் தாக்குவதா?- சசிகலா புஷ்பாவுக்கு திருச்சி சிவா கண்டனம்

அரசியல் ரீதியாக விமர்சித்தால் பொது இடத்தில் தாக்குவதா?- சசிகலா புஷ்பாவுக்கு  திருச்சி சிவா கண்டனம்
Updated on
1 min read

அரசியல் ரீதியாக விமர்சித்துப் பேசியிருந்தாலும் பொது இடத்தில் தாக்குதல் நடத்துவதா? என்று அதிமுக எம்.பி.சசிகலா புஷ்பாவுக்கு, திமுக எம்.பி. திருச்சி சிவா கண்டனம் தெரிவித்துள்ளார்.

டெல்லியிருந்து விமானம் மூலம் சென்னைக்கு இன்று வந்த திமுக எம்.பி. திருச்சி சிவா சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''செய்தித்தாள்கள் எல்லாம் எனக்கும் சசிகலா புஷ்பாவுக்கும் கைகலப்பு என்று கூறுகின்றன. இருவரும் தாக்கிக் கொண்டால் தான் கைகலப்பு. நான் சசிகலா புஷ்பாவை அடிக்கவேயில்லை. அவர் மட்டும் தான் அடித்தார்.

நான் தமிழக அரசையும், முதல்வரையும் விமர்சித்ததாக சசிகலா புஷ்பா கூறியுள்ளார். பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் நான் தமிழக அரசு பற்றி குறை கூற வேண்டிய அவசியம் ஏதுமில்லை. அரசியல் ரீதியாக விமர்சித்துப் பேசி இருந்தாலும் பொது இடத்தில் அடிப்பது தான் மரபா?'' என்று கண்டனம் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து திருச்சி சிவா, இந்த சம்பவம் குறித்து திமுக தலைவர் கருணாநிதியிடம் விளக்கம் அளித்தார்.

பின்னணி:

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள திமுக மற்றும் அதிமுக எம்பிக்கள் வார விடுமுறைக்காக சொந்த ஊர் வந்துவிட்டு, மீண்டும் டெல்லி செல்வது வழக்கம்.

அதன்படி நேற்று சனிக்கிழமை என்பதால் திமுக எம்பி திருச்சி சிவாவும், அதிமுக எம்பி சசிகலா புஷ்பாவும் சொந்த ஊர் திரும்புவதற்காக டெல்லி விமான நிலையம் வந்தனர்.

அப்போது இருவருக்கும் இடையே திடீ ரென வாய்தகராறு ஏற்பட்டதாக வும், இதனால் ஆவேசமடைந்த சசிகால புஷ்பா, திருச்சி சிவாவின் கன்னத்தில் 4 முறை அறைந்ததாகவும் ஏஎன்ஐ செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தை தொடர்ந்து இரு கட்சி எம்பிக்களும் ஒரே விமானத்தில் பயணம் செய்ய மறுத்து, வார்த்தை போரிலும் ஈடுபட்டுள்ளனர். வெகுநேரம் நீடித்த இந்த மோதலால் விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகளும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதற்கிடையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து தரக்குறைவான வார்த்தைகளில் திருச்சி சிவா பேசியதால் தான், சசிகலா புஷ்பா அவரை கன்னத் தில் அறைந்ததாகவும் பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in