

‘கட்சியில் இருந்து ஒதுங்கச் சொன் னார்கள்.. அதனால் ஒதுங்கிவிட் டேன். சசிகலாவுடன் ஆலோசித்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முடிவு எடுப்பேன்’ என அதிமுக (அம்மா) கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஆட்சியிலும் கட்சியிலும் இருந்து தினகரன் குடும்பத்தினரை ஒதுக்கி வைக்க முடிவு செய்துள்ள தாக மூத்த அமைச்சர்கள் நேற்று முன்தினம் இரவு அறிவித்தனர். இதனால் அதிமுகவில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் சென்னை அடை யாறில் உள்ள தனது இல்லத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் பி.வெற்றி வேல், தங்க தமிழ்ச்செல்வன், செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் உள்ளிட்டோருடன் தினகரன் நேற்று காலை ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ஒன்றரை கோடி தொண்டர் களை கொண்ட இயக்கம் அதிமுக. அவர்களின் உழைப்பாலும், ஜெய லலிதாவின் ஆசியாலும் இந்த ஆட்சி நடந்து வருகிறது. மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் கட்சியின் துணைப் பொதுச்செய லாளராக பொறுப்பேற்றேன். கடந்த 2 மாதங்களாக அனைவருடனும் இணைந்து கட்சிப் பணியாற்றி வருகிறேன்.
கடந்த 14-ம் தேதி அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், திண்டுக் கல் சீனிவாசன் ஆகியோர் என் னிடம் தொலைபேசியில் பேசினர். அப்போது சில விவரங்களை தெரி வித்தனர். 4 நாட்களில் திடீரென இப்படி ஒரு முடிவை எடுப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை. கட்சியில் இருந்து ஒதுங்கச் சொன்னார்கள்; ஒதுங்கிவிட்டேன். இதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. என் னிடம் கூறியிருந்தால் நானே ஒதுங்குவதாக அறிவித்திருப்பேன்.
ஏதோ ஒரு காரணத்துக்காக சில அமைச்சர்களுக்கு ஏற்பட்ட அச்சத் தால் கட்சியில் இருந்து என்னை நீக்கப் பார்க்கிறார்கள். அமைச் சர்களின் அச்சத்துக்கு யார் கார ணம் என்பது தெரியவில்லை. எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகளை அழைத்து கூட்டம் நடத்தி ஆலோசனை நடத்தி இதுகுறித்து முடிவு எடுத்திருக்கலாம்.
என்னை விலக்கினால்தான் கட்சிக்கு நன்மை கிடைக்கும் என்றால் கிடைக்கட்டும். எம்எல்ஏக் கள் சிலர் இன்று என்னை சந்தித்தார்கள். அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும், எதிரிகளுக்கு இடமளித்து விடக் கூடாது என அவர்களிடம் கூறி னேன். எக்காரணத்தை கொண்டும் கட்சி பிளவுபடக் கூடாது என்பதே எனது விருப்பம்.
சொந்த சகோதரர்களுடன் எந்த சண்டைச் சச்சரவையும் நான் விரும்பவில்லை. துணைப் பொதுச்செயலாளர் பதவி என் பது கட்சியின் பொதுச்செயலாளர் அளித்த பதவி. எனவே அதை ராஜினாமா செய்ய விரும்ப வில்லை. பொதுச்செயலாளர் சசிகலாவை சந்தித்து ஆலோசித்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்க இருக்கிறேன்.
எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அதனால் ஏமாற்ற மும் இல்லை. இனியும் எனது அரசியல் வாழ்க்கை தொட ருமா என்பதை இறைவன் தீர்மானிப்பார்.
இவ்வாறு தினகரன் கூறினார்.
கட்சியினருக்கு நன்றி
கட்சியில் தற்போது ஏற்பட்டுள்ள நிலை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள தினகரன், ‘எனக்கு இதுவரை ஒத்துழைப்பு நல்கிய கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு நன்றி. எந்தக் காரணத்தைக் கொண்டும் கட்சி பிளவுபட்டுவிடக் கூடாது. நான் ஒதுங்கி இருப்பத னால் கட்சிக்கு நன்மை என்றால் ஒதுங்கியிருப்பதில் தப்பில்லை என நினைக்கக்கூடிய முதிர்ச்சி உள்ளவன். ஏதோ ஒரு அச்சம் காரணமாக அமைச்சர்கள் என்னையும், குடும்பத்தினரையும் ஒதுங்கி இருக்கச் சொல்கிறார்கள். பொது வாழ்க்கையில் அச்சம் இருக்கக்கூடாது’ என கூறியுள்ளார்.